தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது பிரபலங்களிடையே வழக்கம். அதற்காக வொர்க் அவுட் செய்வது, டயட்டில் இருப்பது எனப் பல முயற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்வதுண்டு. இன்னும் தாங்கள் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்கேற்ப தங்களது உடல் எடையைக் கூட்டுவதிலும், குறைப்பதிலும் தொடர் கவனம் செலுத்துவார்கள்.

ஆனால், இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வொர்க் அவுட் அளவுக்கு மீறிச் செல்லும்போது, அவை பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இப்படி தனது உடல் எடையை அதிகரிப்பதற்காக ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட் செய்த செயல், தற்போது பல நிபுணர்களின் எச்சரிக்கையைப் பெற்று வருகிறது.
2014-ல் வெளியான `கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ என்ற மார்வெல் திரைப்படத்தின் மூலம் பெருமளவு கவனம் பெற்றவர், கிறிஸ் பிராட். இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தின் உடல் எடையை அதிகரிப்பதற்காக ஒரு நாளில் 100 கிளாஸ் தண்ணீரைக் குடித்து இருக்கிறார்.
மார்வெல்லோடு தொடர்புடைய ஊட்டச்சத்து நிபுணர் பிலிப் கோக்லியா, அவரது எடையின் ஒவ்வொரு பவுண்டுக்கும் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கும்படி கிரிஸை அறிவுறுத்தி இருக்கிறார். அதனைப் பின்பற்றிய கிறிஸ், “ நான் நாள் முழுவதும், சிறுநீர் கழித்தேன். அது அச்சுறுத்தும் கனவாக இருந்தது’’ என்று தெரிவித்திருக்கிறார்.
அந்த நேரத்தில், கிறிஸ் சுமார் 107 கிலோ எடையுடன் இருந்தார், அதாவது அவர் ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீரைக் குடித்திருக்கிறார். இந்தச் செய்தி பல சுகாதார நிபுணர்களின் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்து வருகின்றனர்.

`குறுகிய காலத்தில் அதிக அளவு நீரை அருந்துவது மிகவும் ஆபத்தானது. சிறுநீரகத்தின் கழிவை வெளியேற்றும் திறனை மிஞ்சும் அளவிற்கு அதிகமாக நீங்கள் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது, `வாட்டர் இன்டாக்சிகேஷன்’ அல்லது `ஹைபோநெட்ரீமியா’ என்ற நிலை ஏற்படலாம்.
இது உங்களது ரத்தத்தின் சோடியம் அளவை நீர்த்துப் போகச் செய்கிறது. மேலும் மூளை செல்கள் உட்பட உயிரணுக்களின் வழக்கமான செயல்பாட்டை பாதிக்கலாம்’ என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.