பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரஹார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையை சுத்தம் செய்யும் பணியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் 96% முடிவடைந்திருந்தது. அதன் பின்னர் ஆமை வேகத்தில் பல போராட்டங்கள் செய்து, 100 சதவிகிதம் திட்டம் நிறைவடைந்து இருப்பதாக தி.மு.க அரசு கூறுகிறது.
ஆனால் இரண்டு மாத காலமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் லீக்கேஜ் ஆகிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் விவசாய மக்கள்மீது தி.மு.க எந்த அளவுக்கு அக்கறை கொண்டு உள்ளது என்பது தெரிகிறது.
ஜனவரி மாதம் இந்த நடைப்பயணம் முடியும் பொழுது, பா.ஜ.க-விற்கு தமிழகத்தில் பெரிய எழுச்சி ஏற்பட்டு இருக்கும். இன்று டெல்லி செல்கிறேன். யாத்திரை எப்படி செல்கிறது என்பது குறித்தான அறிவிப்பை நான் தேசியத் தலைவர்களுக்கு தெரிவித்து வருகிறேன். 3-ம் தேதி பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
டெல்லி சென்று விட்டு வந்து அதில் பங்கேற்கிறேன். அதனை தொடர்ந்து 4-ம் தேதியில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு 7 மாத காலம் இருக்கின்ற நேரத்தில் அவரவர்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என அனைவரும் எண்ணுவார்கள். பா.ஜ.க-வும் அதற்கான வேலையை செய்து வருகிறது. கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் தேசிய தலைவர்கள் பேசுவார்கள். ஏனென்றால் ஒரு கருத்திற்கு எதிர்கருத்து சொல்லினால், அது எங்கே போய் முடியும் என்று தெரியாது.
தூய்மையான அரசியல் என்பதை மக்கள் மனதில் விதைக்க வேண்டும், அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தூய்மையான அரசியல் என்பது ஒரு விதை. தற்பொழுது இதனை நாம் பேச ஆரம்பித்துள்ளோம், முடிந்தவரை அதனை நடைமுறையில் பின்பற்ற பார்க்கிறோம். தூய்மை அரசியல் என்பதை ஒரு தாரக மந்திரமாக முன்வைத்து எடுத்து செல்கிறோம். தூய்மை அரசியல் என்று சொன்னாலே தோல்விகள் நிச்சயம், அதனை தாண்டித்தான் நாம் நிற்க வேண்டும். இந்த நேரத்தில் என்னை விட்டுவிட்டால், நான் தோட்டத்திற்கு போய்விடுவேன்.
இதைவிட எனக்கு எல்லாமே முக்கியம் என்பது, என்னுடைய வேலையை என்னுடைய தோட்டத்தில் செய்யணும். அதற்காகத்தான் ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன். அரசியலில் கட்டாயப்படுத்தி நான் இல்லை. அரசியலில் இருக்க வேண்டுமே என்று இருக்கிறேன். மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசியலை ஒரு கருவியாக பார்க்கிறேன். அரசியலைப் பொறுத்தவரை 70% நெகட்டிவ் 30% பாசிட்டிவ் உள்ளது.” என்றார்.