பாகிஸ்தானில், ஆட்சி முடிவடைவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், பலுசிஸ்தான் எம்.பி அன்வர் உல் ஹக் கக்கர் தற்போது தற்காலிக பிரதமராக இருக்கிறார். நிதி நெருக்கடி, கடன் பிரச்னை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாகிஸ்தானின் நிதிநிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் பெரும் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் வாழ வழியின்றி அந்த நாட்டு மக்கள் பலரும் அரபு நாடுகளான சவுதி அரேபியா, இரான், இராக் போன்ற நாடுகளுக்குச் சட்டவிரோதமாகச் சென்று, அங்கு யாசகம் செய்துவருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானுக்கு, இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து வெளிநாட்டு அமைச்சகச் செயலாளர் ஜுல்பிகர் ஹைதர், “அரபு நாடுகளில் சட்டவிரோதமாக யாசகம் செய்து, கைதானவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். சவுதி அரேபியாவில் 30 லட்சம் பாகிஸ்தானியர்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 லட்சம் பாகிஸ்தானியர்களும், கத்தாரில் 2 லட்சம் பாகிஸ்தானியர்களும் யாசகம் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள், கள்ளத் தோணிகள் வழியாகவும், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் புனிதப் பயணத்துக்கான உம்ரா விசா-வை தவறாகப் பயன்படுத்தியும் அரபு நாடுகளுக்குள் நுழைந்து, பின்பு யாசகம் செய்யத் தொடங்குகின்றனர்” என்று தெரிவித்தார்.
மேலும், இது குறித்து சவுதி அரேபியா, “புனிதத் தலமான மெக்காவைச் சுற்றிலும் பிட்பாக்கெட்டில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சவுதி அரேபியாவின் சிறைகள் பாகிஸ்தானைச் சேர்ந்த கைதிகளால் நிரம்பி வழிகின்றன” என்று தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த ஆகஸ்ட்டில் அந்நாட்டைக் கடுமையாகச் சாடியிருந்தார். “இந்தியா நிலவில் கால் பதித்து, ஜி-20 உச்சி மாநாட்டு கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமரோ ஒவ்வொரு நாடாகச் சென்று நிதிக்காக யாசகம் செய்து கொண்டிருக்கிறார். இந்தியா அடைந்த சாதனைகளைப் பாகிஸ்தானால் ஏன் அடைய முடியவில்லை… இதற்கு யார் பொறுப்பு?” எனக் கடந்த மாதம் கேள்வியெழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.