அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலியா போட்ட வியூகம்.. ஆனால் தோல்வியில் முடிந்தது – ஏன்?

ICC World Cup 2023: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் கவுண்டன் தொடங்கிவிட்டது. வரும் வியாழக்கிழமை (அக். 5) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலகலமாக நடக்க உள்ளது. அங்கு நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், இறுதிப்போட்டி வரை வந்த நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

இந்திய அணி தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியா (IND vs AUS) அணியுடன் வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் அக். 8ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இரு அணிகளும் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் மோதின. ஆனால், அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சேப்பாக்கத்தில் நல்ல ரெக்கார்ட்ஸையும் வைத்திருக்கிறது. 

இந்திய அணியோ உலகக் கோப்பைக்கு (ICC World Cup 2023) முன் ஆசிய கோப்பை தொடரையும், ஆஸ்திரேலியா (Australia) அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று முரட்டுத் தனமான ஃபார்மில் உள்ளது. ரோஹித் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட அணி உலகக் கோப்பையை பெற்றே தீர வேண்டும் என வெறியுடன் இருக்கிறது. சமீபத்தில், அக்சர் படேல் காயம் காரணமாக விலகியதால் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார். 

அணியில் இணைந்த அஸ்வின்

அஸ்வின் (Ashwin) இந்தியாவுக்கு கோப்பையை வாங்கித் தருவதில் மிக முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் பல இடதுகை பேட்டர்களுக்கும், பல சீனியர் பேட்டர்களுக்கும் தலைவலியாய் இருப்பார். எனவே, பல அணிகள் அவர்களை எதிர்கொள்வது எப்படி என பல வழிமுறைகளை தற்போதே தொடங்கியிருக்கும்.

அந்த வகையில், சுவாரஸ்யமான திருப்பமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, குஜராத்தின் உள்ளூர் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் பிதானியாவை அணுகுவதன் மூலம் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் திறமையை பிரதிபலிக்க முயற்சித்தது. இருப்பினும், அஸ்வினுக்கு நிகரான பந்துவீச்சு பாணியைப் பகிர்ந்து கொள்ளும் பித்தானியா, ஆஸ்திரேலியாவின் அந்த கோரிக்கையை பணிவுடன் நிராகரித்துள்ளார்.

அஸ்வினை போல் பித்தானியா

இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு, டெஸ்ட் தொடரில் அஸ்வினை எதிர்கொள்ள மகேஷ் பித்தானியா உதவினார். அதாவது, அஸ்வினின் பந்துவீச்சு பாணியுடன் அவரின் பாணியும் ஒத்துப் போவதால் அவரை ஆஸ்திரேலியாவுக்கு பயிற்சி எடுக்க நல்ல வழியாக இருந்தது. சுழலுக்கு எதிராக பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஒருமுறை பிதானியாவின் உதவியை நாடியுள்ளனர். 

மறுப்பு 

இருப்பினும், மகேஷ் பித்தானியா (Mahesh Pithania) தனது உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதாலும், பிற போட்டிக்களுக்காகவும் ஆஸ்திரேலிய அணியின் அழைப்பை பணிவுடன் நிராகரித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பிதானியா கூறுகையில்,”தற்போது ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் சைடு ஆர்ம் ஸ்பெஷலிஸ்ட் பிரீதேஷ் ஜோஷியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அஷ்வினின் பந்துவீச்சுக்கு தயார் செய்வதற்காக என்னையும் சென்னையில் அவர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை அவர் என்னிடம் தெரிவித்தார். 

ஆனால் இந்த முறை நான் அதை நிராகரிக்க வேண்டியிருந்தது. நான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளதால் அவர்களின் அழைப்பை நிராகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனது பயிற்சி மற்றும் ஆட்டத்தில் நான் கவனம் செலுத்த வேண்டும், வருந்தத்தக்க வகையில், இந்த முறை நான் அவர்களின் அழைப்புக்கு மறுப்பு சொல்ல வேண்டியிருந்தது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.