ஹாங்சோவ், –
ரோகன் போபண்ணா ஜோடி அசத்தல்
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டி தொடரில் 8-வது நாளான நேற்று நடந்த டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா போசெல் இணை 2-6, 6-3, (10-4) என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சங் ஹோ ஹாங்-என் ஷோ லியாங் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த ஆட்டம் 1 மணி 14 நிமிடம் நடந்தது.
நடப்பு போட்டி தொடரில் டென்னிசில் இந்தியா வென்ற ஒரே தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் பிரிவில் ராம்குமார்-சகெத் மைனெனி ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இந்தியாவுக்கு இது 9-வது தங்கப்பதக்கமாகும்.
இந்திய ஸ்குவாஷ் அணிக்கு தங்கம்
ஸ்குவாஷ் போட்டியின் ஆண்கள் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நகர்ந்த இந்த மோதலில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் மகேஷ் மாங்கோங்கர் 8-11, 3-11, 2-11 என்ற நேர்செட்டில் இக்பால் நாசிரிடம் (பாகிஸ்தான்) வீழ்ந்தார். அடுத்த ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-5, 11-1, 11-3 என்ற நேர்செட்டில் முகமது ஆசிமை (பாகிஸ்தான்) எளிதில் தோற்கடித்தார். 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்திய வீரர் அபய்சிங் 11-7, 9-11, 7-11, 11-9, 12-10 என்ற செட் கணக்கில் நூர் ஜமானை (பாகிஸ்தான்) போராடி சாய்த்தார். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. ஆசிய போட்டியில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஸ்குவாஷ் அணி தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் சரப்ஜோத் சிங், திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 14-16 என்ற புள்ளி கணக்கில் சீனாவிடம் (ஜாங் போவென்-ஜியாங் ரான்ஜின்) தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா இதுவரை 6 தங்கம் உள்பட 19 பதக்கங்களை அள்ளி இருக்கிறது.
லவ்லினா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
குத்துச்சண்டையில் பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் 19 வயது இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஜாய்னா ஷிகெர்பிகோவாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்ததுடன், அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தையும் உறுதிப்படுத்தினார். இதேபோல் 75 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் தென்கொரியாவின் சியாங் சுயோனை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.
ஆண்களுக்கான 92 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் நரேந்தர் 5-0 என்ற கணக்கில் ஈரானின் இமானை துவம்சம் செய்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்ததுடன் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார்.
தடகளத்தில் 2 பதக்கம்
தடகள போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் கார்த்திக் குமார் (28 நிமிடம் 15.38 வினாடி) வெள்ளிப்பதக்கமும், குல்வீர் சிங் (28 நிமிடம் 17.21 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். பக்ரைன் வீரர் பிர்ஹானு (28 நிமிடம் 13.62 வினாடி) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
நீளம் தாண்டுதல் தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் (7.97 மீட்டர்) தகுதி இலக்கை (7.90 மீட்டர்) கடந்தும், மற்றொரு இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் (7.67 மீட்டர்) தனது பிரிவில் 2-வது இடம் பிடித்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இதேபோல் 1,500 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் அஜய்குமார், ஜின்சன் ஜான்சன் ஆகியோர் தங்கள் பிரிவில் முறையே 2-வது, 5-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஜோதி யர்ராஜி (13.03 வினாடி) தனது பிரிவில் 2-வது இடமும், நித்யா ராம்ராஜ் (13.30 வினாடி) தனது பிரிவில் 5-வது இடமும் பெற்று இறுதிப்போட்டியை எட்டினர். இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.
டேபிள் டென்னிஸ்
டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி-அஹிகா முகர்ஜி இணை 11-5, 11-5, 5-11, 11-9 என்ற செட் கணக்கில் உலக சாம்பியனான சீனாவின் சென் மெங்-யீடி வாங் ஜோடியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில், காமன்வெல்த் சாம்பியனான இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 8-11, 12-10, 6-11, 4-11, 14-12, 5-11 என்ற செட் கணக்கில் சீனாவின் யீடி வாங்கிடம் தோற்று நடையை கட்டினார். இதேபோல் ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் மானுஷ் ஷா-மானவ் தாக்கர் கூட்டணி 8-11, 11-7, 10-12, 11-6, 9-11 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் வோஜின் ஹாங்-ஜோங்ஹூன் லிம் இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
பேட்மிண்டன்
பேட்மிண்டனில் ஆண்கள் அணிகள் பிரிவில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது. இந்திய அணியில் பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது ஒற்றையர் ஆட்டங்களில் வெற்றியை ருசித்தனர். இரட்டையர் ஆட்டங்களில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடிகள் தோல்வி கண்டது.
ஆண்கள் ஆக்கியில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டி ஆக்கியில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 10-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. கோல் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 4 கோலும், வருண்குமார் 2 கோலும், மன்தீப் சிங், சுமித், லலித்குமார் உபாத்யாய், ஷாம்ஷெர் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது கான், அப்துல் ராணா தலா ஒரு கோல் திருப்பினர். 4-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்து அரைஇறுதியை உறுதி செய்தது. நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.
பளுதூக்குதலில் மீராபாய் சானு ஏமாற்றம்
ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த பளுதூக்குதலில் பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு பங்கேற்றார். உலக மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவரான மணிப்பூரை சேர்ந்த 29 வயது மீராபாய் சானு நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்து களம் கண்ட மீராபாய் சானுவால் சிறப்பாக செயல்பட முடியாததுடன், கடைசி முயற்சியில் எடையை தூக்கிய போது கீழே விழுந்து காயத்துடன் வெளியேறினார்.
‘ஸ்னாட்ச்’ பிரிவில் முதலில் 83 கிலோ எடை தூக்கிய மீராபாய் சானு அடுத்து 86 கிலோ எடையை 2 முறை தூக்க முயற்சித்து தோல்வி அடைந்தார். இதனால் ‘ஸ்னாட்ச்’ பிரிவு முடிவில் அவர் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. இதையடுத்து நடந்த ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் முதல் முயற்சியில் அவர் 108 கிலோ எடையை தூக்கினார். அடுத்து அவர் 117 கிலோ எடையை தூக்க 2 முறை எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. கடைசி முயற்சியின் போது நிலை தடுமாறிய அவர் பின்னோக்கி விழுந்தார். அவர் இறுதி முயற்சியில் எடையை தூக்கி இருந்தால் வெண்கலப்பதக்கத்தை வென்று இருக்க முடியும்.
இந்த போட்டியில் மொத்தம் 191 கிலோ எடை தூக்கிய மீராபாய் சானு 4-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார். வடகொரியா வீராங்கனை ரி சோங் கும் மொத்தம் 216 கிலோ (ஸ்னாட்ச் 92 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 124 கிலோ) எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தக்கவைத்ததுடன் ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் புதிய உலக சாதனையும் படைத்தார். சீன வீராங்கனை ஹூய்ஹா 213 கிலோ (ஸ்னாட்ச் 94 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 119 கிலோ) எடையை தூக்கி வெள்ளிப்பதக்கமும், தாய்லாந்து வீராங்கனை தான்யாதோன் மொத்தம் 199 கிலோ (ஸ்னாட்ச் 90 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 109 கிலோ) எடையை தூக்கி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.