வாஷிங்டன்:”சந்திரயான்
– 3 விண்கலம் போல், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு நிலவு வரை
செல்லும்; அதையும் தாண்டிச் செல்லும்,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர்
ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
வாஷிங்டனில்
இந்தியத் துாதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்,
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அமெரிக்க வாழ்
இந்தியர்களுடன் அவர் நேற்று கலந்துரையாடினார்.
அப்போது ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு, இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இதை, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளோம்.
சந்திரயான் – 3 விண்கலம் போல், இந்த உறவு நிலவை எட்டும்; அதையும் தாண்டிச் செல்லும்.
சமீபத்தில்
நாம், ‘ஜி – 20’ உச்சி மாநாட்டை நடத்தினோம். இது மிகப் பெரிய வெற்றியாக
அமைந்தது. வழக்கமாக, மாநாட்டை நடத்தும் நாட்டுக்குத்தான் அதற்கான பெருமை
சாரும்.
ஆனால், இது இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல; ஜி – 20
அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளின் வெற்றியாகும். இந்த மாநாட்டை சிறப்பாக
நடத்துவதற்கு அமெரிக்கா அளித்த ஒத்துழைப்பு முக்கியமானதாகும்.
நாடுகளுக்கு
இடையே வர்த்தகம், ராணுவம் போன்றவற்றில் உறவு இருக்கும். ஆனால், இந்தியா –
அமெரிக்கா இடையேயான உறவு, மக்களுக்கு இடையேயான உறவாகும்.
இது மனிதத் தொடர்பான உறவு. இந்த உறவு வலுவாக இருப்பதற்கு, இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் பங்கு மிகப் பெரியது.
இரு
நாடுகளுக்கும் இடையேயான உறவு, ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. கடந்த 10 ஆண்டுகளாக
மத்திய அரசின் கடும் உழைப்பு அதில் உள்ளது. இது, எதிர்காலத்துக்கான உறவாக
அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்