நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான திட்டத்தைக் கொண்டுவருவது பற்றி மத்திய பா.ஜ.க அரசு நீண்டகாலமாக பேசிவந்தது. தற்போது, அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு வெளியானபோது, ஒரே நேரத்தில் தேர்தலுக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்ற பேச்சுகள் எழுந்தன.
ஆனால், அதற்கான மசோதா எதுவும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆராய்வதற்கான குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் அதில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
தற்போது, நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஃபார்முலாவை உருவாக்கும் வேலையில் சட்ட ஆணையம் ஈடுபட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை 2029-ல் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை நோக்கி பணிகள் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகியவற்றுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராயுமாறு சட்ட ஆணையம் பணிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், காலவிரயமும் செலவும் குறையும் என்று மத்திய பா.ஜ.க அரசு கருதுகிறது. வாக்காளர்கள் ஒரு முறை வாக்குச்சாவடிக்குச் சென்றால், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு ஆகிய மூன்றுக்கும் ஒரே நேரத்தில் வாக்குச் செலுத்திவிட்டு வந்துவிடலாம் என்கிறார்கள் ஆட்சியாளர்கள். இது தொடர்பான சட்ட ஆணையத்தின் அறிக்கை இன்னும் தயாராகவில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. சமீபத்தில் உயர் மட்டக் குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், மத்திய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடம் இது குறித்து கருத்து கேட்பது என்று முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1983-ம் ஆண்டிலேயே எழுந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
பிறகு 1999-ம் ஆண்டு, நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்தது. அப்போது மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது. பின்னர், 2014 மக்களவைத் தேர்தலின்போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த வாக்குறுதியை பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் வழங்கியது.
தற்போது அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் முயற்சிகளை மத்திய பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. காங்கிரஸ் எம்.பி-யான ராகுல் காந்தி, ‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற எண்ணம் அனைத்து மாநிலங்கள்மீதான தாக்குதலாகும்’ என்று ட்விட்ர் எக்ஸில் விமர்சித்தார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வந்தால், அதனால் சாமானிய மக்களுக்கு என்ன பலன் கிடைக்கும்.. இதற்கு பதிலாக, ஒரே நாடு ஒரே கல்வி.. ஒரே நாடு ஒரே தரத்தில் மருத்துவச் சிகிச்சை ஆகியவைதான் தேவை’ என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.