முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
6 மாதங்களில் கவிழும்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி முடிவு செய்துள்ளது. மாநில நலன் கருதியும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளேன். தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதற்கு முன்பு காங்கிரசுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்திருந்து. எனது தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதற்கு பின்னணியில் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை பல முறை தெரிவித்துள்ளேன். எனது தலைமையிலான ஆட்சி எப்படி கவிழ்க்கப்பட்டதோ, அதுபோன்று இன்னும் 6 மாதங்களில் காங்கிரஸ் அரசும் கவிழும்.
சிறுபான்மையினரை நம்பி…
முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது. ஊழல் மட்டுமே இந்த ஆட்சியில் நடைபெறுகிறது. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து சிறுபான்மையின தலைவர்கள் விலகுவதால் எந்த பாதிப்பும் இல்லை. அந்த சமுதாயத்தினரை மட்டும் நம்பி ஜனதாதளம் (எஸ்) கட்சி இல்லை.
அந்த சமுதாயத்திற்கு மட்டும் நான் பிரதிநிதி இல்லை. நான் 6½ கோடி மக்களின் பிரதிநிதி. மாநில நலனுக்காக நல்ல முடிவு எடுத்துள்ளேன். இந்த அரசு கவிழ்ந்தாலும், சிறுபான்மையின மக்களுக்கு நான் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.