புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி நேற்று முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை ஒரு வார கால பயணம் மேற்கொள்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, அங்கு பாஜக.வின் 2 பரிவர்தன் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று மதியம் நடந்த பரிவர்தன் மகாசங்கல்ப் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அக்டோபர் 3-ம் தேதி திரும்பி வரும் பிரதமர், பஸ்தர் பகுதியில் உள்ள ஜக்தல்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தெலங்கானா மாநிலத்தின் மகபூப்நகர் மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இங்கு ரயில் சேவையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸிங் முறையில் துவக்கி வைக்கிறார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 5 புதிய கட்டிடங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கறார் இங்கு அக்டோபர் 3-ம் தேதி திரும்பிவரும் பிரதமர் மோடி நிசாமாபாத் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நாளை செல்லும் பிரதமர் மோடி, குவாலியர் நகரில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். இங்கு அக்டோபர் 6-ம் தேதி திரும்பிவரும் பிரதமர் மோடி ஜோத்பூர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளை செல்லும் பிரதமர் மோடி சித்தோர்கர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.