புதுடெல்லி/பெங்களூரு: டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அக்டோபர் 15-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கனஅடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று கர்நாடக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. பெங்களூரு மாநகரின் குடிநீர் மற்றும் மண்டியா மாவட்ட பாசனத்துக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்துக்கு 3000 கன அடி காவிரி நீரை திறக்க இயலாது. அதனால் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை சீராய்வு செய்ய வேண்டும். வறட்சி காலத்தில் நீர் பங்கீடு தொடர்பான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மேகேதாட்டுவில் அணைக்கட்ட கோரும் வழக்கை விசாரிக்க வேண்டும்” என கோரியுள்ளது. இதேபோல கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திலும் நேற்று சீராய்வு மனு தாக்கல் செய்தது.
கர்நாடக அரசு கடந்த வாரத்தில் இதே போல காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.