தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளம் சிவாஜி கணேசன்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசனின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவர் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” சிவாஜி கணேசனின் 96-ஆவது பிறந்தநாள் இன்று! நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசனின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நடிகர் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருஉருவப் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், துறை செயலாளர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் குடும்பத்தினர், திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.