வாஷிங்டன்-அரசு செலவுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நள்ளிரவு வரை நடந்த விவாதங்களுக்குப் பின், அமெரிக்க பார்லிமென்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, முடங்கும் அபாயத்தில் இருந்து நாடு தப்பியது.
அமெரிக்காவில் அரசு செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றுக்கான நிதி ஒதுக்கீடுக்கு, அந்த நாட்டின் பார்லிமென்ட் ஒப்புதல் தேவை.
நேற்று துவங்கி, வரும் நவ., மாதம் வரையிலான காலத்துக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்க பார்லிமென்ட் கூடியது.
அரசின் செலவின திட்டங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் சபையில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது.
இந்த சபையில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி அதிக பலத்துடன் உள்ளது. ரஷ்யா போர் தொடுத்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பதற்கு, குடியரசு கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தக் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, அரசு செலவினத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேற முடியாமல் இழுபறி நீடித்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவுக்குள் மசோதா நிறைவேறாவிட்டால், முடங்கும் அபாயத்தில் நாடு இருந்தது.
கடைசி கட்ட விவாதங்களுக்குப் பின், நிதி ஒதுக்கும் மசோதா, 335:91 என்ற ஆதரவுடன் நிறைவேறியது.
அதே நேரத்தில், உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம், இந்த செலவினத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே, குடியரசு கட்சி எம்.பி.,க் கள் ஆதரவு அளித்தனர்.
தன் பதவி பறிபோகும் நிலையில் இருந்தபோதும், அரசின் முயற்சிக்கு, சபாநாயகர் கெவின் மெக்கர்த்தி ஆதரவு தெரிவித்து, தன் கட்சி, எம்.பி.,க்களை சமாதானப்படுத்த முயன்றார்.
கடைசியில், உக்ரைனுக்கான நிதி வழங்குவதை நிறுத்தி வைக்க சமரசம் ஏற்பட்டது. இதைஅடுத்து, இந்த மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
திட்டமிட்டிருந்த நிதியைவிட குறைவான நிதிக்கே தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அரசின் செலவினங்களுக்காக மிக விரைவில் மீண்டும் மசோதா தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்