நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்நகரமே முடங்கி போய்விட்டது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது. விமான நிலையம் மற்றும் ரெயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் ரெயில் நிலைய சுரங்கபாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பல மணி நேரம் பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள். விமான நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள்.
நியூயார்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.