புதுடெல்லி,
தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய காவிரி நீரை கர்நாடக அரசு தரவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. எனவே தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் இம்மாதம் 15-ந்தேதி வரை தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகம் நாள்தோறும் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு அளித்த பரிந்துரை உத்தரவாக பிறப்பித்தது.
ஆணைய கூட்டத்திலேயே இந்த உத்தரவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக அரசு வலியுறுத்தியது. ஆனால் தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கனவே திறந்திருக்க வேண்டிய நிலுவையில் உள்ள 12.5 டி.எம்.சி. நீரையும் திறந்துவிட கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மறு ஆய்வு
அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்தில் மனு தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தமிழ்நாட்டுக்கு 15-ந் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை நாள்தோறும் திறந்து விட உத்தரவிட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும். மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.