மோகா: பஞ்சாபில் சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்து கடந்த வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் இறங்கினர். மூன்றாவது நாளாக நேற்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.
தற்போது பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக பகவந்த்சிங் மான் உள்ளார். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 3 நாள் ரயில் மறியல் போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் கடந்த வியாழக்கிழமை அன்று தொடங்கினர். பல்வேறு விவசாய சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டன.
மோகா, ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், ஜலந்தர், தர்ன் தரண், சங்ரூர், பாட்டியாலா, ஃபெரோஸ்பூர், பதிண்டா அமிர்தசரஸ் உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். வியாழக்கிழமை தொடங்கிய போராட்டம் மூன்றாவது நாளாக நேற்று வரை தொடர்ந்தது. மூன்று நாள் போராட்டத்தால், பஞ்சாப்பில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பல ரயில்களின் வழித் தடங்கள் மாற்றப்பட்டன. ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள பயணிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.