பெண்கள் சில நேரத்தில் வீட்டில் சிறிய பிரச்னைக்கு சண்டை போட்டுவிட்டு பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல், வீட்டைவிட்டு வெளியில் வந்து விடுவது வழக்கம். அப்படி வரும் பெண்கள் சில நேரங்களில் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். அவர்களை மர்ம ஆசாமிகள் பாலியல் தொழிலில் தள்ளிவிடுகின்றனர். மகாராஷ்டிராவிலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவை சேர்ந்த 22 வயது பெண் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு மும்பை நோக்கி வரும் ரயிலில் ஏறி வந்துவிட்டார். அவர் வரும் வழியில் மலை நகரமான லோனவாலாவில் இறங்கினார். எங்கு செல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த அப்பெண்ணுக்கு தங்க இடம் கொடுப்பதாக கூறி, சிலர் கடத்திச்சென்றனர்.
அவர்கள் மலையில் உள்ள ஒரு பங்களாவில் அடைத்து வைத்து, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். இரண்டு வாரங்களாக அப்பெண்ணை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இறுதியில் அப்பெண் தன்னை அடைத்து வைத்திருந்த ஒருவரின் போனை திருடி அதன் மூலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீஸார் ரெய்டு நடத்தி அப்பெண்ணை மீட்டனர்.
அவரிடம் விசாரித்தபோது மேலும் இரண்டு மைனர் பெண்களையும் அவர்கள் கடத்தி, பாலியல் தொந்தரவு செய்வதற்கு அடிமைகளாக வைத்திருப்பது தெரியவந்தது. போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தவுடன் இரண்டு மைனர் சிறுமிகளையும் அவர்கள் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தனர்.
இறுதியாக அப்பெண்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இரண்டு பேரையும் போலீஸார் மீட்டனர். அவர்கள் இரண்டு பேரையும் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். இரண்டு மைனர் பெண்களும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு ரயில் மூலம் மும்பை நோக்கி வந்துள்ளனர்.
அவர்களும் லோனவாலாவில் இறங்கி எங்கு செல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு உதவுவதாகக் கூறி கடத்திச் சென்று, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அடிமைகளாக வைத்திருந்தனர். அவர்களை அடிமைகளாக வைத்திருந்த இரண்டு மைனர் உட்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். இரண்டு மைனர்களும் சிறுவர் சீர்திருத்த முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பெண்களை கடத்தி அடிமையாக வைத்திருந்த விவகாரத்தில், மொத்தம் 10 பேருக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.