சென்னை: ‘பெற்றோரையும், பெரியோரையும் மதிப்பதே சனாதனம்’ என முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
ஹரிஜன சேவா சங்கம் சார்பில் ஆச்சார்ய வினோபா பாவே ஜெயந்தி, மகாத்மா காந்தி ஜெயந்தி, நிர்மலா தேஷ்பாண்டே ஜெயந்தி மற்றும் சங்கத்தின் தலைவர் சங்கர் குமார் சன்யாலின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமை வகித்து மகாத்மா காந்தி, ஆச்சார்ய வினோபா பாவே, நிர்மலா தேஷ் பாண்டே ஆகியோரது உருவப் படங்களை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
‘ஹரிஜன் பந்த்’ விருது: அதைத்தொடர்ந்து, அக்ஷய பத்ரா அறக்கட்டளையின் சார்பில் தக்கர் பாபா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஹரிஜன சேவா சங்கம் மற்றும் தக்கர் பாபா வித்யாலயா குழுமத்தில் கடந்த ஓராண்டில் சிறப்பாக பணியாற்றிய 10 பேருக்கு ‘ஹரிஜன் பந்த்’ விருதுகளும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: நாம் அனைவரும் அமைதிக்காக உழைக்க வேண்டும். அமைதியை இழந்தால் சுய நிலையை இழப்போம். குடும்பங்களிலும், சமூகத்திலும், கிராமத்திலும், நகரிலும், நாட்டிலும் அமைதி என்பது தேவை. அரசியல் வாதிகளும் அமைதியை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மகாத்மா காந்தி, வினோபா பாவே, நிர்மலா தேஷ்பாண்டே ஆகியோரும் அமைதியைத்தான் வலியுறுத்தினர்.
சேவை மனப்பான்மை: அதேபோல போராட்டக்காரர்கள் எப்போதும் அமைதியான முறையில் போராட வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவதே நம் பாரதத்தின் கலாச்சாரம். அதற்கேற்ப ஒவ்வொருவரும் சேவை மனப்பான்மையை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். சனாதனம் தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளாகிவிட்டது.
சனாதனம் என்பது பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு வந்த ஒன்றாகும். பெற்றோர் மற்றும் பெரியோர்களை மதிப்பது, இயற்கையைப் போற்றி பாதுகாப்பது, காடு, மரம், ஆறு, நீர்நிலைகள், விலங்குகளை பாதுகாப்பது உள்ளிட்டவையே சனாதனமாகும். இதுவே நமது கலாச்சாரம். இயற்கையும், கலாச்சாரமும் இணைந்ததே வளமான எதிர்காலமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில் சேத்துப்பட்டில், தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக விடுதி செயல்பட்டு வருகிறது. தற்போது 90 பெண்கள் படித்து வரும் நிலையில், 250 பெண்கள் இலவசமாக தங்கி படிக்க வசதியாக ‘நிர்மலா தேஷ்பாண்டே நிலையம்’ கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஹரிஜன சேவா சங்கத் தலைவர் சங்கர் குமார் சன்யால், செயலர் டி.உமாபதி, கீதாபவன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மனுகோயல், தக்கர் பாபா வித்யாலயா சமிதியின் செயலர் பி.மாருதி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.