புதுடெல்லி: மத்தியபிரதேசத்தில் தர்மசாஸ்த்ரா தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் நாட்களில் விடுப்பு எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச அரசின் நிர்வாகத்தில் தர்மசாஸ்த்ரா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ஜபல்பூரில் செயல்படுகிறது. இதன் நிர்வாகம் சார்பில் மாணவிகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் தங்கள் மாதவிடாய் காலங்களில் சிரமப்படும் நாட்களில் வகுப்புகளில் அமரத் தேவையில்லை. விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலப் பிரிவின் பொறுப்பாளர் சுனில் திரிபாதி கூறும்போது, “மாதவிடாய் கால 5 நாட்களில் ஓரிரு நாட்கள் சிரமத்திற்குரியதாக உள்ளது என மாணவிகள் கூறுகின்றனர். இதனால், அந்த நாட்களில் மட்டும் அவர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளோம். மேலும் மாதவிடாய் எனும் இயற்கை உபாதை பற்றி பொதுவெளியில் பேச மாணவ, மாணவிகள் இடையே தயக்கம் காணப்படுகிறது. இந்த தவறான செயல்பாட்டை மாற்றுவதும் மாதவிடாய் விடுமுறை அளிப்பதன் முக்கிய நோக்கம் ஆகும்” என்று தெரிவித்தார்.
இந்த சலுகை மாணவிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் இந்த சலுகை பெண் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அளிக்கப்படவில்லை. ஏனெனில், இந்த காரணத்திற்கு என அறிவிக்காமல் கூடுதல் விடுமுறை நாட்களை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கடந்த வருடம் அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் அறிவித்துள்ளார். இதன்படி பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 20 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஆண்களுக்கு இதர மாநிலங்களில் உள்ளது போல் 13 நாட்கள் மட்டுமே.
இதுபோன்ற சலுகையை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பெண்களுக்கும் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வருடம் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்என்று கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடாளுமன்றத்திலும் சமீபத்தில் இந்தப் பிரச்சினை எழுந்தது.
இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணைஅமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்த பதிலில், “10 முதல் 19 வயதுமாணவிகளுக்கு மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலங்களில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் விழிப்புணர்வு அளிக்க மத்திய அரசின் தேசிய ஹெல்த் மிஷன் அமைப்புக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது” என்றார்.