வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொட்டி தீர்த்த கனமழையால், அந்நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு மிக கனமழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது.
முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில், முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளதால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள பெரும்பாலான சுரங்கப்பாதைகளில், மழைநீர் தேங்கி உள்ளதால், அவை மூடப்பட்டுள்ளன.
கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை மற்றும் வெள்ளத்தால், நகரில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இது குறித்து, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறுகையில், ”நகரில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்,” என்றார்.
இதையடுத்து, நியூயார்க்கில் அவசரநிலை பிறப்பித்து, அந்நகர கவர்னர் கேத்தி ஹோச்சுல் உத்தரவிட்டார். இதற்கிடையே, ‘வரும் நாட்களில் நியூயார்க்கில் அதி கனமழை பெய்யக் கூடும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement