2024-ல் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்: லட்சிய தாலுகா திட்ட மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: வரும் 2024-ம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று லட்சிய தாலுகா திட்ட மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டில் லட்சிய மாவட்டங்கள் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்மூலம் நாடு முழுவதும் 112 பின்தங்கிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. லட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் லட்சிய தாலுகா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

இதன்படி நாடு முழுவதும் 27 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பின்தங்கிய 500 தாலுகாக்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த தாலுகாக்களின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 16 தாலுகாக்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. லட்சிய தாலுகா திட்டம் தொடர்பான ‘சங்கல்ப் சப்தாஹ்’ (தீர்மான வாரம்) என்ற சிறப்பு மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. வரும் 9-ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறும் இந்த மாநாட்டில் லட்சிய தாலுகா திட்டத்தின் வெற்றி,தோல்விகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.

நாடு முழுவதும் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் காணொலி வாயிலாக இணைந்துள்ளனர். டெல்லி பாரத மண்டபத்தில் நடந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: லட்சிய தாலுகா திட்டத்தில் ஊராட்சிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த திட்டம் வெற்றி பெற உழைத்து வரும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளையும் பாராட்டுகிறேன்.

இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் வழிகாட்டுகின்றனர். மத்திய அரசின் லட்சிய மாவட்டங்கள் திட்டத்தால் நாடு முழுவதும் 112 மாவட்டங்கள் பலன் அடைந்துள்ளன. அந்த மாவட்டங்களை சேர்ந்த 24 கோடி மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. லட்சிய மாவட்டங்கள் திட்டத்தைப் போன்று லட்சிய தாலுகா திட்டமும் மிகப்பெரிய வெற்றி அடையும். கடைநிலை மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது.

இந்த திட்டம் வெற்றி அடைய அனைத்து மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுதந்திர இந்தியாவின் மிகச் சிறந்த 10 திட்டங்களில் லட்சிய தாலுகா திட்டமும் இடம்பெறும் என்று உறுதியாக நம்புகிறேன். மத்திய அரசு துறைகள் நாட்டின் பின்தங்கிய 100 தாலுகாக்களை கண்டறிந்து அந்த தாலுகாக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

இதேபோல மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் உள்ள மிகவும் பின்தங்கிய 100 கிராமங்களைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்த முன்மாதிரி திட்டத்தை உருவாக்க வேண்டும். அடுத்த கட்டமாக 1,000 கிராமங்களை கண்டறிந்து அந்த கிராமங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். அதற்கு நகரங்கள் மட்டுமன்றி அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைய வேண்டும். நாட்டின் 140 கோடி மக்களும் முன்னேற வேண்டும். வளர்ச்சி பணிகளுக்கு அரசை மட்டுமே நம்பியிருக்கும் மனநிலையில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். அந்தந்த பகுதி பொதுமக்கள் அவரவர் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 2024-ம் ஆண்டில் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடைபெற உள்ள லட்சிய தாலுகா திட்ட மாநாட்டில் மீண்டும் உங்களை சந்திப்பேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.