‘பிக் பாஸ்’ வரலாற்றிலேயே ஒரு எழுத்தாளர் போட்டியாளராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை.
கடந்த சீசன்களில் பொது மக்களிலிருந்து ஜூலி, ஷிவின், தனலட்சுமி போன்றோர் கலந்து கொண்டாலும், ஒரு எழுத்தாளர் இன்று வரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை. அந்த பிம்பத்தை உடைத்து தற்போது தொடங்கியுள்ள ‘பிக் பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்கிறார், எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை.
இன்றைய டெக்னாலஜி உலகில் புத்தகம் வாசிப்பவர்கள் அறவே குறைந்துவிட்டனர். படித்து தெரிந்து கொள்வதை விட பிறர் சொல்வதைக் கேட்டு தெரிந்து கொள்ளும் பாட்காஸ்ட் மற்றும் நரேஷனில் மக்கள் பெரிதும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பல கதை சொல்லிகள் யூடியூப் மற்றும் பாட்காஸ்ட் தளங்கள் மூலம் மக்களிடையே கதைகளை எடுத்துச் சென்றாலும், அதில் என்றும் முதலில் நிற்பவர் பவா செல்லதுரை!
தனது குரலுக்காகவும், கதை சொல்லும் விதத்திற்காகவும், பல நூறு கிலோ மீட்டர்கள் கடந்து வந்தும் இவரிடம் கதை கேட்கக் கூடிய ரசிகர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளரான இவர், எழுதுவதைவிட குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறதாக அபரிமிதமாக நம்புகிறார். ஆனந்த விகடன் இதழில் சொல்வழிப் பயணம் தொடரை எழுதியிருக்கிறார்.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கதை சொல்லி என பன்முகத்தன்மை கொண்ட இவர், ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். பேரன்பு, சைக்கோ, ஜெய்பீம் போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். சொல்வழிப் பயணம், இலக்கில்லா பயணங்கள், பங்குக்கறியும் பின்னிரவுகளும் போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதிநாட்களில் கமல்ஹாசன் புத்தகங்களைப் பரிந்துரை செய்வது வழக்கம். கடந்த சீசனில் கதைசொல்லியான பவா செல்லதுரை பற்றி கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். எழுத்தின் மூலமும், தனது கதை சொல்லும் திறனின் மூலமும் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், ‘பிக் பாஸ்’ வீட்டிலும் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவா செல்லதுரை பிக் பாஸ் இந்த சீசனின் இறுதிப் போட்டிக்குச் செல்வாரா? உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!