உத்தமர் காந்தி விருது: சிவகங்கை மத்திய மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ பாண்டியன் தேர்வு

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த எஸ்.ஐ பாண்டியன் என்பவருக்கு சிறந்த பணிக்கான உயரிய விருதான “காந்தியடிகள் காவல் விருது” (உத்தமர் காந்தி) கிடைத்துள்ளது. ஜனவரி 26ம் தேதி சென்னையில் இவ்விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அரிராமன் – நாகராணி தம்பதியரின் மகனான பாண்டியன், தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2016ல் நேரடியாக எஸ்.ஐ-யாக தேர்வாகி, பணியில் அமர்த்தப்பட்டார். மதுரை மண்டலத்தில் மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவில் எஸ்.ஐ-யாக நேர்மையாகவும், சிறப்பாகவும் பணி புரிந்ததற்காக காந்தியடிகள் காவலர் விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நுண்ணறிவு பிரிவில் கடந்த இரண்டரை ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு சிவகங்கை மாவட்டம், ஆராவயல் காவல் நிலையத்திற்கு பாண்டியன் மாற்றப்பட்டார்.

இவ்விருது ஜனவரி 26ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். தமிழக அளவில் 5 பேர் இவ்விருதுக்கு தேர்வான போதிலும், தென்மாவட்டத்தில் மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவில் முதன்முறையாக இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பாண்டியன், “மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி போது, கஞ்சா, போலி மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க தீவிரமாக பணி செய்ததாலும், நேர்மையாக உழைத்ததாலும் இவ்விருது கிடைத்துள்ளது என்றே கருதுகிறேன். காவல் துறையின் உயர் பொறுப்பில் நான் பணியாற்ற வேண்டும் என எனது தாயார் ஆசைப்பட்டார். நேரடியாக நான் எஸ்ஐயாக தேர்வானபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தற்போது, இத்துறையில் விருது பெறும்போது, அவர் உயிருடன் இல்லை. அவர் இருந்திருந்தால் இன்னும் பெருமை கிடைத்திருக்கும். இருப்பினும், இவ்விருது என்னை மேலும் ஊக்கப்படுத்தும். காவல்துறையில் இன்னும் பல விருதுகளை பெற உந்துதலாக இருக்கும். இவ்விருதை எனது தாயாருக்கு சமர்பிக்கவே விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.