சென்னை: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, பனைமர தொழிலாளர் நலவாரியம் சார்பில், தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் ஒரு கோடி பனை மர விதைகள் நடும் திட்டம் நேற்று தொடங்கியது. இந்தமுயற்சி வெற்றியடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பனை மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச்செய்தி:
பராமரிப்பு இல்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரம் தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடையது. நம் மொழியின் அரிய இலக்கியங்களும் சுவடிகள்மூலமாகவே பல நூற்றாண்டுகள் கடத்தப்பட்டன. நுங்கு, பதநீர், பனைமட்டை, நார், ஓலை, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு என பனையின் பயன்கள் எண்ணிலடங்காதவை. தமிழகத்தின் மாநில மரமாகவும் பனைமரமே விளங்குகிறது.
ஆட்சிக்கு வந்ததும் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல்செய்து வரலாறு படைத்த அரசு,பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், பனை நடுவதை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021-22 வேளாண் பட்ஜெட்டில்பனை மேம்பாட்டு இயக்கம் என்றபெயரில் தனி இயக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்மூலம், 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டன. 2022-23 வேளாண் பட்ஜெட்டின்படி, ரூ.2.02 கோடியில் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது.
இதன்மூலம் ரூ.30 லட்சத்தில்10 லட்சம் பனை விதைகள் வழங்கப்பட்டன. தலா ரூ.50 ஆயிரம் வீதத்தில், ரூ.62 லட்சத்தில் 124 இடங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடங்கள் அமைத்தல், ரூ.20.40 லட்சத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிப்பதற்கான கருவிகள் வழங்குதல், ரூ.45 லட்சத்தில் 1,000 பேருக்கு பனைமரம் ஏறுவதற்கான கருவிகள்வழங்குதல், ரூ.43.32 லட்சத்தில் பனைபொருள் வளர்ச்சி வாரியம் சார்பில் பனைவெல்லம், பனங்கற்கண்டு, பிற பனைசார் பொருட்களை தூய்மையான முறையில் தயாரிக்க பயிற்சி, மகளிருக்கு பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் 12 ஆயிரம் பனை விதைகள், 7,500 பனங்கன்றுகள் விநியோகம் செய்யப்படுவதுடன், 116 மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடங்கள் அமைத்தல், 1,000 பனை ஏறும் கருவிகள் வழங்குதல், பனைசார் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்குதல் உள்ளிட்டவைரூ.2 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், கருணாநிதி நூற்றாண்டில் தமிழக கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டத்தை தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரியம் அக்.1-ம்தேதி (நேற்று) தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது இந்த வாரியம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக குமரி அனந்தன் நியமிக்கப்பட்டு 2011-ம் ஆண்டு வரை பணியாற்றினார். இந்த வாரியம், கிரீன் நீடோ சுற்றுச்சூழல் அமைப்பு, மாநில நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுகிறது. மேலும், சென்னை ஐஐடி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளை சேர்ந்த ஒரு லட்சம் தன்னார்வலர்களும் இணைந்து ஒரு கோடி பனை விதைகளை நடும்திட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தமுயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவ்வையார் சிலை அருகேதொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் பனை விதைகளை விதைத்து திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் 430 இடங்களில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.