மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து, அணை நீர்மட்டம் 36.94 அடியாக சரிந்துள்ளது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை இல்லாதது, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட காரணங்களால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,524 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,446 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 6,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நீர்மட்டம் 36.94 அடியாகவும், நீர்இருப்பு 10.56 டிஎம்சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணையின் மீன் வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் தேவைக்காகவும் 9.5 டிஎம்சி தண்ணீரை அணையில் இருப்பு வைக்க வேண்டும். எனவே, தற்போதுள்ள நீர்வரத்தையும், நீர் இருப்பையும் கணக்கில் கொண்டால், இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும்.
மேலும், மேட்டூர் அணை நீரைக்கொண்டு 150-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நீர் இருப்பு குறைந்துள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனே விடுவித்தால் மட்டுமே, காவிரி டெல்டா பகுதிகளில் பயிர் சாகுபடியை காப்பாற்ற முடியும். எனவே, கர்நாடக அரசை தொடர்ந்து வலியுறுத்தி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை பெற்றுத் தர தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.