சென்னை தில்லை கங்கா நகர் 29-வது தெருவைச் சேர்ந்தவர் ராதா ராகவன் (46). இவர் 22.9.2023-ம் தேதி இரவு கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தில்லை கங்கா நகரில் நடந்து வந்த ராதாவைப் பின்தொடர்ந்து வந்த நபர், திடீரென அவரின் தாலி செயினைப் பிடித்து இழுத்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ராதா, செயினைக் கைகளால் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். ஆனால், ராதா அணிந்திருந்த செயின் அறுந்தது. இதில் இரண்டு சவரன் எடையுள்ள பாதி செயின் திருடனின் கையில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ராதாவின் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அங்கு கூடினர். அவர்கள், செயின் பறிப்பில் ஈடுபட்டவரைத் தேடினர். ஆனால் அவர் தப்பிச் சென்றுவிட்டார்.
செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனுடன் ராதா போராடியதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ராதா, அன்றைய தினம் இரவே ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அம்மு வழக்கு பதிவுசெய்து விசாரித்தார். சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆதம்பாக்கம் போலீஸார் ஆய்வுசெய்தனர். அதனடிப்படையில் ராதாவிடமிருந்து செயினைப் பறித்தது திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்பராஜா (27), அவரின் நண்பரான ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர்.
விசாரணையில் இவர்கள் ராதாவிடம் மட்டுமல்லாமல் மேலும் இரண்டு பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்து ராதாவின் இரண்டு சவரன் செயின் உட்பட ஒன்பதரை சவரன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ராதா ராகவன் கொடுத்த புகாரில், “என்னுடைய கணவர், கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நான் வீட்டின் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு தனியாகச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னால் ஓடிவந்த நபர், செயினைப் பறித்தார். உடனே நான் என்னுடைய தாலியைப் (மாங்கல்யத்தை) பிடித்துக் கொண்டேன். ஆனால் செயின் அறுந்து இரண்டு சவரன் எடையுள்ள செயின் திருடனின் கையி்ல் சிக்கிக்கொண்டது. எனவே என்னுடைய செயினைப் பறித்தவர்மீது நடவடிக்கை எடுப்பதோடு, செயினையும் மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னையில் மீண்டும் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல் நிலையங்களில் புகார்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. செயின் பறிப்பில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.