ஹைதராபாத்: இம்மாதம் 29-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தையொட்டி சுமார் 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. இம்மாதம் வரும் 29-ம்தேதி சந்திர கிரகணம் என்பதால், முந்தைய நாளான 28-ம் தேதி இரவு 7.05 மணி முதல் 29-ம் தேதிஅதிகாலை 3.15 மணி வரை கோயில்நடை அடைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, 5.15 மணிக்கு பிறகு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் ஏழுமலையான் கோயில் நடை சுமார் 8 மணி நேரம் வரை சாத்தப்படுகிறது. இதனால் 28-ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமகன்களுக்கான சிறப்பு தரிசனம் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது திருமலை யாத்திரையை திட்டமிட வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தரிசனத்திற்கு 30 மணி நேரம்: தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2-வது சனிக்கிழமை வந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சனிக்கிழமை 5 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை 30 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.