புதுடெல்லி: இடதுசாரி தீவிரவாதம் தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் இன்று (அக்.2) சோதனை நடத்தினர்.
இரண்டு மாநிலங்களிலும் இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்சல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் மறைவிடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. தகவலின் அடிப்படையில் என்ஐஏ தனிப்படையினர் மாநிலப் போலீஸாருடன் இணைந்து காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 60 இடங்களில் இந்த சோதனை நடைபெற்ற வருகிறது. தெலங்கானாவின் ஹைதராபாத், ஆந்திராவின் குண்டூர், நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களில் சோதனைகள் நடைபெறுகின்றன. நக்சல்களுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் சிவில் உரிமை அமைப்புகளின் தலைவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம், கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், ட்ரோன்கள் மற்றும் லேத் இந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுது்து, இதுதொடர்பாக 12 பேர் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தடை செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் என்ஐஏ கடந்த செப்.9-ம் தேதி சோதனை நடத்தியது.