புதுடெல்லி: பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கென்று கட்டமைப்பை உருவாக்க தமிழ்நாடு, குஜராத், ஒடிசாவில் மூன்று துறைமுகங்களை அடையாளம் கண்டுள்ளது.
கார்பன் உமிழ்வைக் குறைக்க பசுமை எரிபொருள் உருவாக்கத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2030-க்குள் ஆண்டுதோறும் 50 லட்சம் டன் பசுமைஹைட்ரஜன், பசுமை அமோனியா, பசுமை மெத்தனால் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற துறைமுகங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தூத்துக்குடி, காண்ட்லா, பாரதீப் ஆகிய இடங்களில் உள்ள மூன்று துறைமுகங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
இந்தத் துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா, பசுமை மெத்தனால் உள்ளிட்டவற்றை சேகரிக்க, கையாளுவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் வஉசி துறைமுக ஆணையம், இந்தக் கட்டமைப்புக்காக 500 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளதாகவும், கட்டமைப்புப் பணிக்காக மானியம் கோரி அரசுக்குவிண்ணப்பம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒடிசா அரசு அம்மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பு கட்டமைப்புக்கான இடத்தை தேர்வு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. அதேபோல், குஜராத் மாநிலம் காண்ட்லாவில் உள்ள தீன் தயாள் துறைமுகம் ஆணையம் இந்தக் கட்டமைப்பு பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.