பேரர் அனுமதித்தால் தான் ஹோட்டலுக்குள் செல்ல முடியும்! ஷெங்கேன் நாடுகளில் ஒரு பயணம் 2 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

குறிப்பிட்ட நாளில் ஒரு வழி ட்ராப் டாக்சி பிடித்து திருச்சியில் இருந்து சென்னை அடைந்தோம்.

உள்ளூர் விமானத்தில் செல்லலாம் என்றால் நாங்கள் கொண்டு சென்ற லக்கேஜ் எடை அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் இருந்ததால் சரிப்பட்டு வரவில்லை.

துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் நாங்கள் பிரயாணித்த அன்று சென்னையில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. துபாயில் ஃப்ரான்க்ஃப்ர்ட் செல்லும் விமானம் பிடிக்க மூன்று மணி நேரத்திற்கும் மேல் இடைவெளி இருந்ததால் விமான தாமத புறப்பாடால் பிரச்னைகள் எழவில்லை.

துபாய் பன்னாட்டு விமான நிலையத்தின் அடிப்படை வசதிகள் பல தரப்பட்ட பிரயாணிகளுக்கும் வசதியாய் உள்ளது. நாங்கள் செல்ல வேண்டிய ஃப்ரான்க்ஃபர்ட் விமானம் கிளம்பும் குறிப்பிட்ட வாசலை துபாயில் சுலபமாக அடைந்து விட்டோம்.

துபாயிலிருந்து ஃப்ரான்க்ஃபர்ட் சுமார் ஆறரை மணி நேர பிரயாணம்.

Frankfurt

ஃப்ரான்க்ஃபர்ட் விமானநிலையம் அடைந்தவுடன் எங்களை முதலில் வரவேற்றது விமான நிலையத்தில் பரவியிருந்த சிகரெட் புகை தான். நல்ல வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதை தடை செய்வது தனிப்பட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக கருதப்படுகிறது.அதே போல் ஃப்ரான்க்ஃபர்ட் விமான நிலையத்தில் அடிப்படை கட்டுமான வசதிகள் துபாய் விமான நிலையத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மிக குறைவாகவே உள்ளது. உதாரணத்திற்கு துபாய் விமானநிலையத்தில் கழிப்பிட வசதிகள் அதிகம் கிடைக்கும்.ஃப்ரான்க்ஃபர்ட் விமான நிலையத்தில் அவ்வளவு அதிகமாக கழிப்பிட வசதிகள் கண்ணில் தென்படவில்லை. மேலும் ஃப்ரான்க்ஃபர்ட் விமான நிலையத்தில் நம்மை வழிநடத்துவோரும்,உதவுவோரும் குறைவு.

ஆங்கில அறிவு எங்களுக்கு ஃப்ரான்க்ஃபர்ட்டில் கைகொடுக்கவில்லை. நீங்கள் அடிமட்ட ஜெர்மன் மொழி அறிவு கொண்டிருந்தீர்களானால் அது சற்று கைகொடுக்கும். விமான நிலையத்தில் கிடைக்கும் இலவச வைஃபை மகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள உதவியது.

எங்களை ஃப்ரான்க்ஃபர்ட்டில் முதலில் வரவேற்றது சிகரெட் புகை என்றால் வெளியில் வந்தவுடன் எங்களுக்கு ஜெர்மனியை வித்தியாசப்படுத்தி காண்பித்தது அந்த சாலைகளில் தென்பட்ட சுத்தம். முதல் பாகத்தில் சொன்னது போல் சரவண பவன் உணவகம் அருகில் சிறிது அசுத்தமாக இருந்தாலும் அதை தவிர்த்து நாங்கள் பிரயாணித்த ஷெங்கேன் நாடுகளில் நாங்கள் கண்டது சுத்தமும் சுகாதாரமுமே.

ஃப்ரான்க்ஃபர்ட்டில் இருந்து ஸ்டுட்கார்ட் கிளம்பினோம். வழி எல்லாம் ஊசி இலைக்காடுகளில் காணப்படும் மரங்களை கடந்து வந்தோம். ஜெர்மானிய காடுகளில் சொல்லிக் கொள்ளும்படியான வன விலங்குகள் இல்லை. ஜெர்மானிய காடுகளில் சொல்லிக்கொள்ளும் படியான வனவிலங்கு காட்டெருமையே ஆகும்.

மனைவியுடன் எஃப்.எம்.பொனவெஞ்சர்

ஸ்டுட்கார்ட் அடைந்து சற்று இளைப்பாறினோம். ஸ்டுட்கார்ட் ஒரு அழகிய நகர். அங்கு அமைந்துள்ள வீடுகளை சுற்றி அவ்வீட்டின் உரிமையாளர்களே அழகிய தோட்டங்கள் அமைத்து பராமரித்து வருகின்றனர். நம் ஊர் வீடுகளில் காணப்படும் மாமரங்கள் போல் அங்கு ஆப்பிள் மரங்கள் காணப்படுகின்றன.

ஜெர்மனியின் தென்பகுதியில் உள்ள ஸ்டுட்கார்ட்டில் விமான நிலையமும் உள்ளது.ஸ்டுட்கார்ட்டை சுற்றி சுற்றுலா செல்வோர் பார்க்க தகுந்த சில நகரங்கள் உள்ளன. ஸ்டுட்கார்ட்டில் உள்ள சிட்டி செண்டரும் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று. சிட்டி செண்டரில் உயர உயர தூண்கள் கொண்ட நவீன கட்டிட கலைக்கு மாதிரிகளாக கட்டிடங்கள் உள்ளன. நாங்கள் சிட்டி செண்டர் சென்ற பொழுது ஒரு இளைஞன் சாலை ஓரத்தில் அமர்ந்து கிட்டார் வாசித்து கொண்டிருந்தான். அவன் அருகில் ஒரு தொப்பி வைக்கப்பட்டு அதில் நாணயங்கள் நிரம்பி கிடந்தன.

ஸ்டுட்கார்ட் ஐஸ்கிரீம் பார்லர்களில் கிடைக்கும் பப்பிள் ட்ரின்க் கட்டாயம் ருசி பார்க்க வேண்டிய ஐஸ்கிரீம் கலந்த குளிர்பானங்களில் ஒன்று.

ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக நாங்கள் பார்த்து வியந்த இன்னொரு விஷயம் இளைஞர்களுக்கு சமமாக சுதந்திரமாக அலைந்து திரியும் சீனியர் சிட்டிசன்கள். நடந்தோ அல்லது சைக்கிளிலோ மிக்க தன்னம்பிக்கையுடன் சுற்றித் திரியும் வயதான ஆண்கள் பெண்கள் இரு பாலாரையும் இங்கு சர்வ சாதாரணமாக காணலாம். மிக வயதான சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் கூட தனித்தோ அல்லது துணையுடனோ வீதிகளிலும் உணவகங்களிலும் காணப்படுகின்றனர். மனித துணை இல்லாத சிலர் மனித குலத்தின் நல்ல நண்பனாகிய நாய்களுடன் காணப்படுகின்றனர்.

Representational Image

ஐரோப்பிய நாடுகளில் உள்ள உணவகங்களில் உணவு அருந்த செல்வோமாயின் உணவகத்தின் வெளியில் நின்று பேரர் ஒருவர் அனுமதித்த பின்னரே உள்ளே சென்று அமரமுடியும். ரிசர்வ் செய்திருந்தாலன்றி தன்னிச்சையாக உணவகங்கள் உள்ளே நுழைய முடியாது. இது சாலை ஓரங்களில் வெளியில் போடப்பட்டுள்ள காலியாக இருக்கும் மேஜைகளுக்கும் பொருந்தும்.

ஐரோப்பாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் ஒரு மோட்டார் கார் உள்ளது. சீராக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் யாரும் இல்லை. எல்லாம் சிக்னல் கட்டுப்பாடு தான். ஹார்ன் ஒலியை நாம் கேட்கவே முடியாது. ஹார்ன் ஒலித்து சென்ற வாகனங்கள் ஆம்புலன்சும் போலீஸ் வண்டிகளும் தான்.

மேலும் சாலைகளில் சிக்னல் செயல்படும் வரையருக்கப்பட்ட இடங்களில் தான் பாதசாரிகளும் சைக்கிளில் செல்வோரும் கடக்கவேண்டும். வரையருக்கப்படாத இடங்களில் கடக்க வேண்டுமாயின் சாலைகளை கடக்கும் முன்னுரிமை பாதசாரிகளுக்கும் சைக்கிளில் செல்வோருக்குமே தரப்படுகிறது. மோட்டார் கார்கள் நின்று பாதசாரிகள் சாலை கடந்த பின்னரே பிரயாணிக்கின்றனர். ஆனால் ட்ராம் வண்டிகள் சாலைகளில் செல்லும் பட்சம் முன்னுரிமை ட்ராம்களுக்கே கிடைக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கார் குறைந்தது இருப்பதால் வாடகை கார்களை பொறுத்த வகையில் எண்ணிக்கை குறைவு. அவை வசூலிக்கும் வாடகையும் அதிகம். பொதுமக்களின் உபயோகத்திற்கென நிறைய பேருந்துகள், ட்ராம் மற்றும் மெட்ரோக்கள் ஓடுவதால் வாடகை கார்களை உபயோகிப்பவர் எண்ணிக்கையும் குறைவு.

ஸ்டுட்கார்ட்டில் வீட்டு கூரைகள் கூம்பு வடிவில் உள்ளன. குளிர்காலத்தில் பெய்யும் பனிப்பொழிவை சுலபமாக அப்புறப்படுத்த இவ்வகை கூம்பு அமைப்பு உபயோகமாக இருக்கும்.

ஜெர்மனி வட கோளரங்கத்தில் உள்ளது. இதனால் கோடைகாலமான ஜூலை துவங்கி செப்டம்பர் நடு வரை சூரிய வெளிச்சம் சுமார் இரவு பத்து மணி வரை கோடை காலத்தில் தென்படுகிறது. ஆம். கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக பகல் நேரம் அதிகம். இரவு நேரம் குறைவு.

பள்ளியில் படித்த பொழுது பரிட்சையில் நினைவுக்கு வராத, “ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வே நாடு இரவில் சூரியன் இருக்கும் நிலம்” என்பது இப்பொழுது என் ஞாபகத்துக்கு வந்தது.

நம் இளைய தலைமுறை வெளிநாடுகளில் சென்று இந்திய ரூபாய் மதிப்பில் நல்ல சம்பளம் மட்டும் வாங்குவதை பார்க்கும் நாம் அதன் பின்னால் இருக்கும் அவர்கள் கடின உழைப்பையும் பாராட்ட வேண்டும். வாரத்தில் நாற்பது மணி நேரம் வரையருக்கப்பட்ட உழைப்பு நேரம் என்றால் நாற்பது மணி நேரம் அவர்கள் உழைத்தே ஆகவேண்டும். ஒரு நாளில் இரண்டு மணி நேரம் அனுமதி பெற்றார்கள் என்றால் அந்த இழப்பை, அந்த இரண்டு மணி நேரத்தை அவர்கள் வேறொரு நாளில் சரி செய்தே ஆகவேண்டும்.

எனவே மகள், மருமகனின் வேலையை பாதிக்காதவாறு வார விடுமுறை நாட்களில் சில இடங்களை சுற்றிப் பார்க்க தீர்மானித்தோம்.

நாங்கள் இம்முறை ஸ்டுட்கார்ட் அருகில் அமைந்துள்ள ட்யூபின்கென், ஹெய்டல்பெர்க் போன்ற சில குறிப்பிட்ட நகரங்களை வார விடுமுறை நாட்களில் சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருந்தோம்.

tubingen

ட்யூபிங்கென்.

ஸ்டுட்கார்ட்டில் இருந்து அருகில் உள்ள ட்யூபிங்கென் எனும் நகரை ஒரு வார விடுமுறை நாளில் அடைந்தோம்.

ட்யூபிங்கென் நெக்கர் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்நகரில் அமைந்துள்ள கட்டிடங்களின் அழகிய வடிவமைப்பு கண்ணை கவர்வனவாய் உள்ளன. இந்த கட்டிடங்களில் பூசப்பட்டிருக்கும் வண்ணங்களும் பார்வைக்கு இதமாக உள்ளன. அழகிய நகரம்.

ஹெய்டல்பெர்க்

அக்காலத்தில் ரோமானிய சாம்ராஜ்யம் மிக பலம் வாய்ந்ததாக இருந்தது. ரோமானியர்கள் அண்டை நாடுகளின் மேல் அடிக்கடி படையெடுத்து அந்நாட்டு மன்னர்களை சிறை பிடித்து செல்வங்களையும் அழித்து வந்தனர். இது போன்ற படையெடுப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே இத்தாலியின் அண்டை நாடான ஜெர்மனி முழுதும் இருந்த மன்னர்களும் பிரபுக்களும் கோட்டைகளை கட்டி அவற்றினுள் வசித்து வந்தனர்.

அவ்வாறு கட்டப்பட்ட கோட்டைகளில் ஒன்று தான் ஹெய்டல்பெர்க் கோட்டை.

மனைவியுடன் எஃப்.எம்.பொனவெஞ்சர்

புராதானமான பாழடைந்த சிதிலங்களை கொண்ட ஹெய்டல்பர்க் கோட்டை ஜெர்மனியில் சுற்றுலா செல்வோர் தவிர்க்க கூடாத இடங்களில் ஒன்று. நெக்கார் நதியை ஒருபுறம் கொண்டு மலை மேல் கட்டப்பட்டு சிதிலமடைந்துள்ள ஹெய்டல்பர்க் கோட்டை இரு முறை புனரமைக்கப் பட்டும் முழுவதுமாக புனரமைக்க முடியவில்லை. இந்த ஹெய்டல்பெர்க் கோட்டை பழங்கால ஜெர்மானிய கட்டிடகலைக்கு நல்லதொரு சான்று. இந்த கோட்டையை அடைய நவீன கேபிள் காரில் செல்வது நல்ல ஓர் அனுபவம்.

இந்த கோட்டையில் இருந்து அக்காலத்தில் வடிவமைக்க முயற்சி செய்யப்பட்டு தோல்வியடைந்த அடுக்கு தோட்டங்களையும் காணலாம். ஹெய்டல்பர்க் கோட்டை ஜெர்மனியில் பெரிய பரப்பளவில் அமைந்துள்ள கோட்டைகளில் ஒன்று.

ஸ்(Z)விஃப் ஆல் டென்

ஸ்விஃப் ஆல்டென் இன்னொரு வாயில் நுழையாத ஜெர்மானிய நகரின் பெயர். இங்கு அமைந்துள்ள- பதினந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட- புனித பெனடிக்ட் என அழைக்கப்படும் ஆசிர்வாதிப்பர் கோவில் சுற்றுலா செல்வோரால் தவிர்க்கபடகூடாத கோவில்களில் ஒன்று.

கோவிலின் உள்ளே கூரையில் காணப்படும் ஓவியங்களும் அழிந்துவிட்ட பரோகா வேலைப்பாடில் வடிவமைக்கப்பட்ட சுருவங்கள் எனப்படும் சிலைகளும் கண்ணை கவர்வனவாக உள்ளன. இங்கு நிறுவப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட சுருவங்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிலின் அருகில், முந்தைய காலங்களில் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து போட்டதாகவும், பலி கொடுத்ததாகவும் வரலாறு கூறுகிறது. மேலும் மனநோய் மருத்துவமனை தற்பொழுதும் அக்கோவிலின் அருகில் உள்ளது.

லிஸ்டென்ஸ்டெயின்

ஸ்விஃப் ஆல்டென்னில் இருந்து திரும்பும் பொழுது லிஸ் டென் ஸ்டெயின் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கோட்டையையும் காணலாம். ஜெர்மனி எங்கும் அமையப்பட்டுள்ள கோட்டைகளின் எண்ணிக்கையை இன்னும் ஒன்றாக கூட்டுவது இச்சிறிய கோட்டை.இந்த கோட்டையை ஆண்ட பிரபுக்களின் தற்போதைய தலைமுறையினரின் ஃபோட்டோ போட்டு கோட்டை நுழைவு வாயில் டிக்கெட்டுடன் கோட்டையை பார்க்க வரும் அனைவருக்கும் கொடுக்கிறார்கள்.

நம் ஊர் அகழி போல் அங்கும் கோட்டையை சுற்றி அகழி வெட்டி முதலையை அக்காலத்தில் வளர்த்திருக்கிறார்கள்.

இந்த கோட்டைக்கு முன்பாக வடிவமைக்கப்பட்டுள்ள காடு போன்ற சிறுவர் பூங்கா ஐரோப்பிய நாடுகளில் குழந்தை வளர்ப்பு முறையும் அவர்களுக்கு தன்நம்பிக்கை வளர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகளும் நமக்கு தெரியப்படுத்துகிறது.

ஜெர்மனியில்  சுற்றிப் பார்க்க ஃப்ரான்க்ஃபர்ட், ம்யூனிக், பெர்லின், பான் போன்ற பெரிய நகரங்கள் பல இருந்தாலும் அவற்றை அடுத்த முறை பார்க்க வேண்டிய இடங்களாக மனமெனும் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன்.

அன்புடன்

எஃப்.எம்.பொனவெஞ்சர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.