வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொச்சி :கேரளாவில், ‘கூகுள் மேப்ஸ்’ உதவியுடன் காரில் சென்ற இரு இளம் டாக்டர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, பருவமழைக் காலங்களில் அந்த செயலியை பயன்படுத்த வேண்டாம் என, அம்மாநில போலீசார் எச்சரித்துள்ளனர்.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், டாக்டராக பணிபுரிந்து வந்த அத்வைத், 29, அஜ்மல், 29, உள்ளிட்ட ஐந்து பேர், நேற்று முன்தினம் காலை காரில் சென்றனர். கூகுள் மேப்ஸ் செயலி உதவியுடன் காரை டிரைவர் இயக்கினார்.
கோதுருத் என்ற பகுதி அருகே கார் வந்தபோது, இடது புறம் திரும்புவதற்கு பதில், நேராக சென்று பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், அத்வைத், அஜ்மல் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ‘பருவமழைக் காலங்களில் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்த வேண்டாம்’ என, கேரள போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:கூகுள் மேப்ஸ் செயலி உதவியுடன், காரை டிரைவர் இயக்கி உள்ளார். கனமழையால் போதிய வெளிச்சம் இல்லாததால், மேப்பில் காட்டியபடி இடது புறம் திரும்புவதற்கு பதில், நேராகச் சென்றதால் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
மழைக்காலங்களில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டு விடும். இவை கூகுள் மேப்ஸ் செயலியில் உடனடியாக தெரிய வாய்ப்பில்லை.
இதனால், மழைக் காலங்களில் அந்த செயலியை பயன்படுத்துவது, சில சமயங்களில் ஆபத்தாக முடியும். மேலும், மழைக் காலங்களில் அறிமுகமில்லாத வழிகளில் செல்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement