வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
என் மாமனார் மாமியார் இருவருக்கும் உடன் பிறப்புகளும் உற்றம் சுற்றமும் மிகப் பெரிது. அனேகமாக அவர்களது வயதில் இருந்த அனைத்துப் பெரியவர்களுக்கும் நீரிழிவு இருந்தது. அதில் ஒரு சிலருக்கு அது தொடர்பான விரல் நீக்கம் போன்ற வேறு சில பாதிப்புகளும் இருந்தன. மிகச் சிறிய வயதிலேயே நெருங்கிய சொந்தத்தில் ஒருவருக்கு ஆறாத புண் மூலமே அப்போதே நீரிழிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இப்படி எங்களது தலைமுறையிலும் பலர் உடம்பிலும் நீரிழிவு தலை நீட்ட ஆரம்பித்து விட்டிருந்தது மெதுவாக.
ஆனால் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டியது இதைத்தான்…
ஒரு விஷயம் குறித்து பயப்படுதல் நின்ற நிலையிலேயே நம்மை நிறுத்தி வைக்கும். அலட்சியப் படுத்துதல் இன்னும் கீழே தள்ளும். ஆனால் சரியான முறையில் சிந்திக்க முனைவது நல்ல வழி காட்டும். முன்னேற்றமும் தரும்.
சமையலைப் பொறுத்த அளவு அடுப்படியில் நான் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாகத் தான் ஆகி விட்டேன்.. கரண்டி பிடித்த இத்தனை ஆண்டுகளில் இட்லிக்கு அரைத்தால் கூட மாவில் உப்பு சரியாகத்தான் சேர்த்திருக்கிறேனா என்று முடிந்த வரை செக் செய்வது வழக்கம்.
ஏனெனில் பொங்கிப் பூரித்திருக்கும் மாவில் உப்பு அட்ஜஸ்ட் செய்கிறேன் என்று கலக்கிக் கொண்டிருந்தால் காற்றுக் குமிழ்கள் குறைந்து இட்லி சுவை குறைந்து விடுமே என்று….நிவேதனம் செய்யும் பண்டங்களில் அது முடிந்ததும் நாலு கால் பாய்ச்சலில் அடுப்படிக்கு ஓடி எல்லா உணவு வகைகளும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி செய்திருக்கிறேனா என்று சுவைத்து தேவை எனில் சரி செய்தால் தான் நிம்மதி..
சிலர் குழந்தைக்கு எடுத்த உணவை சுவைக்கக் கூடாது என்பார்கள். குழந்தைக்கு உணவு ஊட்டும் பெற்றோர்களுக்கும் முதலில் நான் அதைத்தான் சொல்வேன். முதல் கவளம் உனக்கு… சுவையை நீ அறிந்து பின் பாதுகாப்பாக குழந்தைக்குக் கொடு என்று தான் சொல்வேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் சமைக்கும் முறைகளில் சேர்க்கும் பொருட்களில் சமைப்பவர்கள் பல கட்டுப்பாடுகளை நுழைக்க முயற்சிக்கையில் அவற்றைச் சாப்பிடுபவர்களின் மன நிறைவையும் யோசிக்க வேண்டும் தானே.
சரி… மேலும் கொஞ்சம் நமது உணவு முயற்சிகளைப் பார்ப்போம்…
முளை கட்டிய பருப்பு வகைகளும் உணவில் சேர்க்கச் சொல்லியிருந்தார்கள். எனவே அவற்றை ஊற வைக்கையில் கொஞ்சம் அதிகமாக ஊற வைத்து தண்ணீர் வடித்து ஒரு உயரமான டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விடுவது வழக்கம். வழுவழுப்புடன் இருக்கும் முளைத்த தானியங்களையும் அவற்றின் வாசனையையும் பலருக்குப் பிடிப்பதில்லை. இந்த முறையில் ஃப்ரிட்ஜில் மெதுவாக முளை விடும். ஆனால் அவ்வளவு சீக்கிரம் வாசனையோ சுவையோ மாறுபடாது.
நித்தம் செய்யும் வழக்கமான சமையலில் முடிந்த போதெல்லாம் ஏதாவது ஒரு வகையில் பிடித்த பிடி இந்த ஊறிய முழுப் பயறுகளைச் சேர்த்து விடுவது வழக்கமாய் விட்டது. முழுப் பருப்புகளை ஊற வைத்து அடையிலும் பயன் படுத்திக் கொள்வோம். அப்போது எனக்கு சுண்டல் அடை குழம்பு கூட்டுகளில் சேர்ப்பது தவிர இவற்றைப் பயன்படுத்த வேறு வழிகள் நிறையத் தெரியாது.
அவற்றைச் சமைத்துத் தரும்போது கொஞ்சம் ஹெவியாக உணர்வதாக என் கணவர் சொல்வார். என்ன செய்வது. இருவர் பணியுமே காலை பத்தில் இருந்து மாலை ஐந்து வரை ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலையாக இருந்தது. இனிப்பு சேர்க்காத இஞ்சி டீ சுக்கு மல்லி காஃபி இப்படித்தான் ஏதாவது யோசிப்பேன்.
இஞ்சி பூண்டு சேர்த்த சமையல் அப்போது எனக்குப் பழகாதது. வீட்டில் பிரசவத்தின் போது மட்டும் நல்ல நாள் பார்த்து பூண்டு சேர்த்து பிறகு கொஞ்சநாள் சென்று நிப்பாட்டி விடுவார்கள். ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக அவற்றின் சமையல் பயன்பாடுகளை அறிய நேர்ந்தது.. அப்போது சில பெரிய ரெஸ்டாரன்ட்டுகளில் வட இந்திய உணவு வகைகள் வர ஆரம்பித்தன. அவற்றில் பனீர் பட்டர் மசாலா நிறையப் பேரின் ஃபேவரைட் ஆக இருந்தது அன்று. அப்படி ஏதாவது சாப்பிட்டு வந்தால் அலுவலகத்தில் கூட அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்வோம்.
வெண்ணெய் போன்ற அதன் கிரேவியில் என்ன சேர்த்திருப்பார்கள் என்றெல்லாம் யோசிப்பேன். பெரிய மகன் சரியான சுவைக் கில்லாடி.. இப்படி ஏதாவது புதிதாய் உண்ணுகையில் தான் பிஞ்சுக் கரங்களால் எனக்குக் கொஞ்சம் ஊட்டி விட்டு அம்மா எனக்கு இது போல் செய்து கொடு என்பான். இப்ப வரை இது தொடர்கிறது. மேலும் சப்பாத்திக்கு இது போன்ற பல தொடுகறிகளில் பல தால் கிரேவிகளில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துச் செய்வதையும் அவற்றின் முறைகளையும் புத்தகங்கள் வாயிலாகக் கொஞ்சம் கொஞ்சமாக அறிய ஆரம்பித்தேன். நம்ம ஊர் வகைகளுக்கு மட்டும் பஞ்சமா என்ன… என்ன…நான் அதற்குப் பல ஆண்டுகள் வீட்டிலும் வெளியிலும் பழகவில்லை. நன்மைகளை அறிந்தபின் விட முடியுமா?
அதன் பலனும் கிட்டாமல் இல்லை. அந்த வயதில் இது மாதிரி கடலை வகைகளைப் பார்த்தாலே அசவுகரியமாக உணர்ந்தவர் இப்போது இந்த வயதில் தினம் சப்பாத்தியுடன் பருப்பு வகை சேர்த்த சைட் டிஷ்களை சிரமம் இன்றி எடுத்துக் கொள்கிறார்.
இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எந்த முறை உணவுக் குறிப்பாக இருந்தாலும் கீ இன்கிரெடியன்ட்ஸ் என்று சொல்லப்படும் தனித்துவமான சில மசாலாக்களைக் கற்றுக் கொண்டு வெண்ணெய் நெய் கிரீம் எண்ணெய் போன்ற சேர்ப்புகளை கவனத்துடன் சேருங்கள். பனீர் பட்டர் மசாலா தால் மக்கனி சோலே பனீர் புர்ஜி பாவ் பாஜி மசாலா போன்ற பல வகைகளையும் நாம் நம்ம ஊர் சமையலை நம் உடல் நலத்துக்கு ஏற்றமாதிரி மாறுதல்களுடன் செய்து கொள்வது போல் கண்டிப்பாகச் செய்து கொள்ள முடியும்… நான் முயன்று செய்கிறேன்..
உதாரணத்துக்கு எண்ணெய் மிதக்கும் புளிக் குழம்பில் இருந்து ஒரு ஸ்பூன் எண்ணெயில் தாளித்த அதே புளிக்குழம்பு வரை நம் இல்லங்களில் அவரவர் தேவைப்படி செய்து கொள்வோம் தானே.. அது போலத் தான்.
இதில் நான் ” டயட் தால் மக்கனி” செய்யும் முறை எனக்கே சிரிப்பை வரவழைக்கும் எப்போதும். ஒரு சோப்பு விளம்பரத்தில் தலை சிறந்த உணவுக் கலை வல்லுனர்களான திரு சஞ்சீவ் கபூர் திரு தாமு அவர்களைப் பார்த்ததில் இருந்து எனக்கு அதைச் சமைக்கத் கற்றுக் கொள்ள ஆசையாக இருந்தது. ஆனால் எதையும் நம்ம உடம்புக்கு ஏத்த மாதிரியில்ல செய்ய முடியும்…மெனக்கிடல் என்று ஒன்று இருந்தால் அதுக்கு ஏற்ற பலனும் கொஞ்சம் கிடைக்கும் என்றுதான்..
முயற்சித்தேன்..செய்தேன்..அவர்களெல்லாம் என்னை தயை கூர்ந்து மன்னித்தால் எனது செய்முறையைச் சொல்கிறேன். அந்த அனுபவமே ஒரு தனிப் பகுதி ஆகிவிடும்… பார்ப்போமே இன்னும்….
-மீனாக்ஷி மோஹன்
ஹைதராபாத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.