ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ, பிடிஓ முன்னிலையில் கேள்வி கேட்டவரை ஊராட்சி செயலர் காலால் உதைத்து, தனது ஆதரவாளர்களைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கங்கா குளம் கிராமத்தில் உள்ள கோயிலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சி தலைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேப்பங்குளத்தை சேர்ந்த அம்மையப்பன் என்பவர், “ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சுழற்சி முறையில் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என உள்ளாட்சித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கடந்த முறை நடந்த அதே இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்ற போது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது அதே இடத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதனால் பிற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர்” என்றார்.
அதற்கு, ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், கடந்த கூட்டத்துக்கு நீ ஏன் வரவில்லை என்றார். அப்போது அம்மையப்பன், “ஆகஸ்ட் 17-ம் தேதி ஊராட்சி தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகம் தகுதி ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன” என்றார்.
இதனால் கோபமடைந்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், தரையில் அமர்ந்திருந்த அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். அவரது ஆதரவாளர்கள் அம்மையப்பனை கடுமையாக தாக்கினர். தான் நீதிமன்ற உத்தரவு பெற்று பணியில் தொடர்வதாகவும் தன்னை பற்றி எப்படி பேசலாம் என்றும் அம்மையப்பனை தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது புகார் அளித்தவரை எப்படி தாக்கலாம் என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகாத வார்த்தைகளால் பேசிய ஊராட்சி செயலரை பிடிஓ மீனாட்சி சமாதானம் செய்தார். கடும் அமளி காரணமாக கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. எம்எல்ஏ, பிடிஓ, ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கேள்வி கேட்டவரை ஊராட்சி செயலர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊராட்சி செயலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் காயமடைந்த அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அம்மையப்பன் கூறுகையில், “பிள்ளையார் குளம் ஊராட்சியில் உள்ளாட்சி விதிகளை மீறி வழிபாட்டு தளத்தில் கிராம சபை நடத்தியது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தேன். அந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க பிடிஓ விற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, என்னையும், ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன், ஊராட்சி தலைவர் பூங்கொடி ஆகியோரையும் நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது மழை பெய்ததால் கோயில் முன் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இனி அது போன்று வழிபாட்டு தலங்களில் கூட்டம் நடத்தப்படாது என ஊராட்சி தலைவர் தெரிவித்தார். ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம், பிடிஓ மீனாட்சி ஆகியோர் என்னிடம் பேசி வற்புறுத்தி புகார் மனுவை வாபஸ் பெரும் கடிதத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர். நான் அளித்த புகார் மீது அன்றே நடவடிக்கை எடுத்து இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. சம்பந்தபட்டவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இந்நிலையில் அம்மையப்பன் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வன்னியம்பட்டி போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.