2003 World Cup Memories: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தற்போது கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. இதுவரை 1975ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 12 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறையும், மேற்கு இந்திய தீவுகள் 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன.
இந்திய அணியும் 1983 மற்றும் 2011ஆம் ஆண்டு என இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. மேலும், 12 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பை தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவதால் தனது மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது எனலாம். இருப்பினும் இந்தியாவுக்கு 1983, 2011 உலகக் கோப்பை தொடர் மட்டுமின்றி 2003 தொடரும் இந்தியாவுக்கு முக்கியமான ஒன்றாகும்.
உலகக் கோப்பையில் இந்தியா
1975 மற்றும் 1979 உலகக் கோப்பையில் சேர்த்து ஆறு போட்டிகளில் விளையாடி இந்தியா 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. இந்த தொடரிலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் கேப்டனாக செயல்பட்டார். இதன்பின், 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்தியா கோப்பையை வென்ற நிலையில், 1987ஆம் ஆண்டு முதல்முறையாக உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது. ஆனால், அதில் அதே கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியால் அரையிறுதி வரையே முன்னேற முடிந்தது.
இதையடுத்து, 1992, 1996, 1999 ஆகிய மூன்று உலகக் கோப்பையிலும் இந்திய அணிக்கு முகமது அசாருதீன் கேப்டனாக செயல்பட்டார். இதில் 1992இல் ரவுண்ட் ராபின் சுற்றோடும், 96இல் அரையிறுதியோடும், 99இல் சூப்பர் 6 சுற்றோடும் இந்தியா வெளியேறியது. இந்த காலகட்டத்தில் சச்சன் உலகின் சிறந்த பேட்டராக உருவெடுத்திருந்தாலும் அவரால் உலகக் கோப்பை கனவை அடைய இயலவில்லை.
2003 உலகக் கோப்பை தொடர்
அந்த வகையில், 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகும். கேப்டன்ஸி கங்குலியின் கைகளுக்கு வந்திருந்தது. இந்த தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு பிரிவுகளில் தலா 7 அணிகள் மோதின. அதன்பின், குரூப் சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றன.
அரையிறுதியில் கென்யா
இதில் ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, கென்யா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆம், நீங்கள் படித்தது சரிதான். கென்யா அரையிறுதி வரை முன்னேறியிருந்தது. காரணம். கென்யா இலங்கை, ஜிம்பாப்வே போன்ற அணிகளை சூப்பர் 6 சுற்றில் வீழ்த்தியிருந்தது. மேலும், சில பாதுகாப்பு காரணங்களுக்காக நைரோபியில் நடைபெற இருந்த கென்யா உடனான போட்டியில் நியூசிலாந்து விளையாட மறுத்தது. எனவே, கென்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு கென்யா முன்னேறியது.
2003 ஏன் ஸ்பெஷல்?
இருப்பினும், அரையிறுதியில் கென்யாவை வீழ்த்தி இந்தியாவும், இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு வந்தன. ஆனால், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு, தொடரில் அதிக ரன்களை குவித்திருந்த சச்சின் அந்த போட்டியில் நான்கு ரன்களில் ஆவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்தது. குறிப்பாக, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 360 ரன்களை இலக்காக நிர்ணயித்ததை மறக்க முடியாது. அந்த போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்து, கோப்பையை கைப்பற்ற தவறியது.
என்னதான் இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும் 2011இல் இந்தியா கோப்பையை கைப்பற்ற உதவிய சேவாக், யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், ஆஷிஸ் நெஹ்ரா உள்ளிட்டோரின் அறிமுக தொடராக 2003 உலகக் கோப்பை தொடர் இருந்தது என்பது நினைவுக்கூரத்தக்கது. 2011இல் இந்தியா வெற்றி பெற்றதற்கு அடிப்படையாக அமைந்ததே இந்த 2003 உலகக் கோப்பை தொடர்தான் என்பதை மறுக்க இயலாது.