எனக்கு வயது 30. விபத்துகளைப் பார்க்கும்போதும் துக்ககரமான விஷயங்களைக் கேட்கும்போதும் சட்டென்று மயக்கமும் நடுக்கமும் ஏற்பட்டு அதீதமாக வியர்த்துவிடுகிறதே… காரணம் என்ன? தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர், சுபா சார்லஸ்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு ‘வாசோவேகல் ஷாக்’ (vasovagal shock) என்று பெயர். விபத்துகளைப் பார்க்கும்போதும், நம் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகள் குறித்துக் கேள்விப்படும்போதும் சிலர் மயங்கிக்கூட விழுவதுண்டு. இன்னும் சிலருக்கு ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் வரும்.
அப்படிப்பட்ட தருணங்களில் பயந்து நடுங்குவதும், வியர்த்துக் கொட்டுவதும்கூட நடக்கும். இந்த பாதிப்புக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் உள்ளாகலாம்.
சிலரால் இத்தகைய நிகழ்வுகளைக் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாது. அடிக்கடி இப்படி பாதிப்புக்குள்ளாகும் சிலர், லேசான அதிர்ச்சிக்குரிய செய்தியைக் கேள்விப்பட்டாலே படபடப்பாகி, மயங்கி விழுவார்கள். அவர்களுக்கு ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் வெகுவாகக் குறையும்.
முதல்முறை இத்தகைய அனுபவத்தை எதிர்கொள்பவர், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறலாம். இத்தகைய அறிகுறிகளின் பின்னணியில் வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதையும் மருத்துவர் கண்டுபிடிப்பார்.
மற்றபடி இது போன்ற தருணங்களில் வித்தியாசமான அறிகுறிகளை உணர்பவர்கள், உடனடியாக ஓரிடத்தில் உட்கார்ந்து விடுவது நல்லது. மூச்சை ஆழ்ந்துவிட்டு ரிலாக்ஸ் செய்யலாம். சிறிது தண்ணீர் குடிக்கலாம்.
இந்தப் பிரச்னை உள்ளவர்கள், உடனடியாக ஒரே இரவில் அதிலிருந்து விடுபடுவது என்பது சாத்தியமில்லை. முதலில் சில நாள்களுக்கு, அதிர்ச்சிக்குரிய செய்திகளைப் பார்ப்பது, கேள்விப்படுவதை சற்று தவிர்க்கலாம்.
மெள்ள மெள்ளதான் இதிலிருந்து விடுபட முடியும். இது போன்ற செய்திகளை கதைகளில் படிப்பது, டி.வியில் பார்ப்பது என மெள்ள மெள்ள இந்த விஷயங்களை ஏற்க மனதைப் பழக்கலாம். பிறகு ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையாக வெளியே வரலாம்.