விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அப்படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று காலைப்பொழுதில் தளபதி68 படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கான அறிவிப்பைப் போலலே சத்தம் காட்டாமல் செய்தியாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் எளிமையாக விழா நடந்தேறியிருக்கிறது. படத்தின் நாயகன் விஜய் கலந்துகொண்டிருக்கிறார். அவரோடு ஆச்சர்யமாக பிரசாந்த், பிரபுதேவா இருவரும் இணைந்திருக்கிறார்கள்.
ப்ரியங்கா மோகன், மீனாட்சி செளத்ரி, சிநேகா, லைலா எனப் பட்டியல் இன்னும் நீளுமாம். கிட்டத்தட்ட பிரசாந்த்திற்கு பெரிய அளவில் கைகொடுக்கப்போகும் படம் என்கிறார்கள். விஜய்க்கு சகோதரனா, நண்பனா, வில்லனா என ரசிகர்கள் மத்தியில் இந்த காம்பினேஷன் பரபரப்பாகி இருக்கிறது.
பிரசாந்த் தன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை விஜய் மகிழ்ச்சியோடு வரவேற்றாராம்.வெங்கட்பிரபு இரண்டு பேருக்கும் அருமையான இடங்கள் வைத்திருந்தது தான் பிரசாந்த் ஆர்வமாக உள்ளே வரக்காரணமாம். லியோ வெளியான அடுத்தடுத்த வாரத்தில் படத்தின் பெயரை அறிவித்துவிட்டு விஜய் 68 அதகளமாக ஆரம்பமாகவிருக்கிறது.