ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானாவில் நக்ஸலைட்களின் உறவினர்கள், வழக்கறிஞர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட சுமார் 60 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நக்ஸலைட்களின் நெருங்கிய உறவினர்கள், அவர்களது ஆதரவாளர்கள், சில தன்னார்வ தொண்டு அமைப்பினர், வழக்கறிஞர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரைதீவிர சோதனை நடத்தினர்.
அந்த வகையில், ஹைதராபாத்தில் பவானி மற்றும் அவரது வழக்கறிஞர் சுரேஷ் வீடு மற்றும் அலுவலகத்திலும், வாரங்கலில் சைதன்ய மகிளா மண்டலி உறுப்பினர் அனிதா, சாந்தம்மா ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது.
இதேபோல, ஆந்திர மாநிலம் நெல்லூர் சாஹிப்பேட்டையில் உள்ளஎல்லங்கி வெங்கடேஸ்வரலு, திருப்பதியில் பிரபல வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா, குண்டூரில் டாக்டர் ராஜராவ் ஆகியோரின் வீடு, அலுவலகங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி உள்ளனர்.
திருப்பதி மாவட்டம் சில்லுகூரு மண்டலத்தில் ஜாதி நிர்மூல போராட்ட சமிதி அமைப்பின் மாவட்ட தலைவர் பாலய்யா வீட்டில் சோதனை நடந்தது. வெடிகுண்டு வழக்கில் பாலய்யாவின் மகள் பத்மா, மருமகன் சேகர் ஆகியோர் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டூர் மாவட்டம் கொண்டபாடூரு சுப்பாராவ், பிரகாசம் மாவட்டம் சீமகுர்த்தியை சேர்ந்த வெங்கட்ராவ், சந்தமாகுலூருவில் சீனிவாச ராவ், ராஜமுந்திரியில் நாஜர், கொனால லாஜர், ஸ்ரீகாகுளத்தில் மிஸ்க் கிருஷ்ணய்யா, அனந்தபூரில் அரசு ஆசிரியர் ஸ்ரீராமுலு ஆகியோரது வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ஆந்திரா, தெலங்கானாவில் மொத்தம் 60 இடங்களில் ஒரே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்நடத்திய இந்த சோதனையில், பல்வேறுமுக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.