ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்தே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்

அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு (eRL 2.0) அறிமுகப்படுத்தல், இம்மாதம் 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்தப் பொறிமுறையின் ஊடாக வீட்டிலிருந்தவாறே மக்களுக்கு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,

”இந்நாட்டில் அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தவும் முறைகேடுகளைகத் தடுக்கவும் அரச சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். எனவே, இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையின்போது அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், மாநகர சபைகள், மாவட்டச் செயலகங்கள் உள்ளிட்ட ஒன்பது வகையான அரச நிறுவனங்களைத் தெரிவுசெய்து, அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் ஒன்பது முன்னோடி வேலைத் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மேலும், எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் ஒன்லைன் முறையில் (eRL 2.0) வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய 08 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தி அடுத்த மாதம் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக ஒன்லைனில் கட்டணங்களை செலுத்தத் தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டுக்குள் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நாடு முழுவதும் அரச சேவையை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வேலைத்திட்டத்தை அடைவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் Digi – Econ 2023-2030′ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இணையாக தொழில்நுட்பக் கண்காட்சிகள், மாநாடுகள், டிஜிடல் துறையில் திறமைகளை வெளிப்படுத்திய இளைஞர், யுவதிகளை பாராட்டும் நிகழ்வுகள் போன்றன நடத்தப்படவுள்ளன. நாட்டில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கான டிஜிட்டல் முதலீட்டு மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது, நாட்டின் முதலீடுகளை வலுப்படுத்த உதவும். இந்த நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவதே இந்த Digi – Econ திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் குறுகிய காலத்தில் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என்றும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.