ஒன் பை டூ: `தேசிய ஜனநாயக கூட்டணி அர்த்தமற்றது' என்ற தேஜஸ்வி யாதவின் கருத்து சரியா?

கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்

“தேசிய ஜனநாயகக் கூட்டணி இதற்கு முன்பாக எப்போது இருந்தது… எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, `இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியபோதுதான் ‘ஐயோ நாமும் ஒரு கூட்டணி வைத்திருந்தோமே… அது எங்கே?’ என்று தேடிப்பிடித்து கூட்டம் போட்டார் மோடி. அதற்கு முன்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற ஒன்று இருந்தும், இல்லாத நிலையில்தான் தொடர்ந்தது. கடந்த ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில் பா.ஜ.க-வினர் தங்களது கூட்டணிக் கட்சிகளை அழைத்து, ஓர் ஆலோசனைக் கூட்டமாவது நடத்தியது உண்டா… மசோதாக்களை நிறைவேற்ற மட்டுமே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கேட்டுப் பெறுவார்கள். அந்தக் கூட்டணியில் இருந்த ஒரே பெரிய கட்சி அ.தி.மு.க மட்டுமே. அதுவும் தற்போது வெளியேறிவிட்டது. பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்து நன்மையடைந்த கட்சி என்பது அரசியல் வரலாற்றிலேயே கிடையாது. மாயாவதி, சிவசேனா தொடங்கி அனைத்துக் கட்சிகளையும் தங்களின் சுயநலத்துக்காக உடைத்து, சின்னா பின்னமாக்கி, அந்தக் கட்சியே இல்லாமல் செய்துவிடுவதுதான் பா.ஜ.க-வின் வாடிக்கை. கூட்டணி மாண்பு குறித்து எந்தக் கவலையுமற்றவர்கள் பா.ஜ.க-வினர். என்.டி.ஏ கூட்டணிக்கு எந்தவித அர்த்தப்பாடும், எந்தக் காலத்திலும் இல்லை என்பதே நிதர்சனம்!”

கனகராஜ், யுவராஜ்

யுவராஜ், இளைஞரணித் தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

“சற்றும் ஏற்புடைய கருத்து அல்ல. இவர்கள் அமைத்திருக்கும் ‘இந்தியா’ கூட்டணி, ஊழலின் ஒட்டுமொத்த முகமாகவே இருக்கிறது. அந்தக் கூட்டணியில் யாருக்குமே ஒருமித்த கருத்து கிடையாது. சனாதனம் குறித்த சர்ச்சையின்போது, மம்தா தொடங்கி கெஜ்ரிவால் வரை மாறுபட்டதைக் கண்கூடாகப் பார்த்தோமே… இவர்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. மத்திய பா.ஜ.க அரசு எந்த ஊழல் புகாரும் இல்லாத ஓர் ஆட்சியை வழங்கிவருகிறது. இதனால் நாட்டின் நன்மதிப்பும் உலக அரங்கில் உயர்ந்திருக்கிறது. கூட்டணியிலிருந்து

அ.தி.மு.க வெளியேறியது பெரும் இழப்புதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதை எப்படி பா.ஜ.க தவறவிட்டது என்பது புரியவில்லை. ஆனால், தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். ‘தமிழ் மாநிலத்தில் ஊழல் தி.மு.க-வுக்கு எதிராக நிற்கும் அ.தி.மு.க-வுடன் நாங்கள் நிற்கிறோம்’ என்பதை எங்கள் தலைவர் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். வரும் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்குத் தகுந்த பாடம் புகட்டப்படும். வரும் 2024 தேர்தலில் மக்கள் அந்தக் கூட்டணியைப் புறக்கணிக்கப்போவதை இப்போதே ஆரூடமாகச் சொல்கிறேன்!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.