ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மற்றும் காலாகோட் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (திங்கள்) இரவு தொடங்கிய தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஜம்முவின் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெஃப்டினன்ட் கர்னல் சுனீல் பர்த்வால் கூறுகையில், “தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இப்போதைக்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளுடன் பலத்த சண்டை நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 13 ஆபரேஷனுக்குப் பின்னர் அதே பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த ஆபரேஷன் இன்று நடைபெறுகிறது. இந்த ஆபரேஷனை போலீஸ், பாதுகாப்புப் படை இணைந்து நடத்தி வருகிறது. காலாகோட் வனப்பகுதியில் 2 அல்லது 3 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கலாம் என்று பாதுகாப்புப் படைகள் கணித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளன” என்றார்.
என்கவுன்ட்டரைத் தொடர்ந்து நிகழ்விடங்களை பாதுகாப்புப் படைகள் சுற்றிவளைத்துள்ளன. காஷ்மீரின் பீர் பாஞ்சல் பள்ளத்தாக்கில் உள்ள ரஜோரியில் இந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஏப்ரல் – மே காலக்கட்டத்தில் மட்டும் இப்பகுதியில் இரண்டு பெரிய தாக்குதல்கள் நடந்தன. இதில் 10 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
முன்னதாக கடந்த செப்.13 ஆம் தேதி அனந்தநாக் மாவட்டத்தில் தொடங்கிய தாக்குதல் 7 நாட்கள் நடைபெற்றது. இதில் மூன்று ராணுவ அதிகாரிகள் ஒரு காவல்துறை உயர் அதிகாரி என 4 பேர் கொல்லப்பட்டனர்.