மெக்சிகோவில், பிரார்த்தனை கூட்டத்தின்போது சர்ச் கூரை இடிந்து விழுந்ததில்,10 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தமோலிபாஸ் மாகாணத்தின் கடற்கரை நகரமான சியுடாட் மெடாரோவில் சான்டா குரூஸ் சர்ச் அமைந்து உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
இதற்காக பெண்கள், குழந்தைகள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் சர்ச்சில் குழுமி இருந்தனர்.
அப்போது கட்டடத்தின் சர்ச் கூரை திடீரென இடிந்து விழுந்ததால், அதிர்ச்சியடைந்த மக்கள், அலறியடித்து ஓடினர்.
பலர், இடிந்து விழுந்த மேற்கூரையின் அடியில் சிக்கித் தவித்தனர்.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளை அகற்றி, அங்கு சிக்கி இருந்த, 50க்கும் மேற் பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், 10 பேர் பலியானதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்மாகாண பாதுகாப்பு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மெக்சிகோவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் கட்டட விபத்துகள் நிகழ்வது சகஜம்.
எனினும், இந்த சம்பவம் நிகழும்போது, எந்த நில அதிர்வும் அந்தப் பகுதிகளில் ஏற்படவில்லை.
எனவே, சர்ச் முறையாக கட்டப்படாததால் தான், இந்த விபத்து நிகழ்ந்துள்ளதை உறுதி செய்துள்ளோம்.இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த உள்ளோம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement