தமிழ்நாட்டில் சென்னை அருகே வண்டலூரில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இது வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுவதுண்டு.
இந்த உயிரியல் பூங்காவில் வன உயிரின வாரம் 2023 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பார்வையாளர்களுக்கான சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடப் பகுதிக்குச் செல்வதற்கான வசதியையும், QR குறியீட்டு நுழைவுச்சீட்டு வசதியையும் மற்றும் பூங்கா வனவிலங்கு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்கையும் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ம.வரலட்சுமி மதுசூதனன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுச் சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) சுப்ரத் மஹாபத்ரா, மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சீனிவாஸ் ரா.ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் ஏ.உதயன், மற்றும் வனத்துறையின் பிற மூத்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு இடங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளன. அதில் சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடம் மிகவும் பிரபலாமானது. இப்பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடம் 147 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த புதர்க்காடுகளாக உள்ளன. 2020 மார்ச் கொரோனா பரவிய சமயத்தில் பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்பட்டு, மூடப்பட்டது.
தற்போது 3 ஆண் சிங்கங்கள், 4 பெண் சிங்கங்கள் என 7 சிங்கங்கள் இந்த பூங்காவின் சிங்க உலாவிடத்தில் உள்ளன. பன்னர்கட்டா மற்றும் லக்னோ உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் (1 ஆண் 1 பெண்) கொண்டு வரப்பட்டன. மான்கள் உலாவிடப் பகுதியில் ஏராளமான கடமான், புள்ளிமான் மற்றும் கேளையாடு மான்கள் இருக்கின்றன. இந்த மான்கள் உலாவருவதை பார்வையிட, பார்வையாளர்களின் வசதிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் உலாவிடப்பகுதிக்கு செல்வதற்காக மட்டும் தனி வழியை அரசு அமைத்துள்ளது. பார்வையாளர்கள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிகளின் வழியாக மான்கள் உலாவிடத்தை அடையலாம். பாதுகாப்புச் சுவர் மற்றும் சுற்றுச் சுவர் சீரமைக்கப்பட்டு, குளம் மற்றும் நீர்நிலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உலாவிடத்திற்கு செல்லும் வகையில் குளிர்சாதனப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பார்வையாளர்களுக்கு எளிதான முறையில் நுழைவுச்சீட்டு பெற்று செல்லும் வகையில் QR குறியீடு அடிப்படையிலான நுழைவுச்சீட்டு அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இம்முறையானது பூங்கா நுழைவு, வாகன நிறுத்தம், BOV, சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடச் சுற்றுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவப் பராமரிப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, அதிநவீன வசதிகள் உள்ளன. புதிதாக கட்டப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கில் மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பறவைகள் உள்பட சிறிய விலங்குகள் முதல் சிங்கம் மற்றும் புலிகள் போன்ற பெரிய விலங்கினங்கள் வரை அவசரகால சிகிச்சைகளை இங்கு செய்ய முடியும்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கான புதிய இணையதளத்தையும் வனத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த இணையதளம் காப்பங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதுடன், ஓய்வு இல்லங்கள் மற்றும் வனச்சுற்று போன்ற வசதிகளையும் ஆன்னைலனில் பதிவு செய்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் நினைவுப்பொருள்கள் ஆன்லைனில் வாங்கும் வகையில் புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலமாக புலிகள் காப்பகங்கள் தங்கள் பொருள்களை ஆன்லைனில் விற்க வசதிவாக இருக்கும். இவ்விழாவில், பறவைகள் சரணாலயங்கள் குறித்த பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய `கழுவேலி மற்றம் உசுடு பறவைகள் சரணாலயங்கள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.