திருப்பதி: திருப்பதியில் சென்னையைச் சேர்ந்த தம்பதியின் இரண்டரை வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராமசாமி சந்திரசேகர் என்பவர் தனது மனைவி, மற்றும் இரண்டு மகன்களுடன் திருப்பதிக்கு வந்தார். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு நேற்று இரவு மீண்டும் சென்னை செல்ல திருப்பதி பேருந்து நிலையம் வந்தார்.
சென்னை பேருந்துக்காக பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் மூன்றில் அவர்கள் காத்திருந்தனர். சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டனர். இரண்டரை மணி அளவில் மகன் அருள்முருகன் (2) காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பேருந்து நிலையம் முழுவதும் தேடினர். ஆனால் சிறுவன் அருள்முருகனைக் காணவில்லை.
இதனைத் தொடர்ந்து சந்திரசேகர் அளித்த புகாரை அடுத்து திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, குழந்தை அருள்முருகன் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை சந்திப்பில் உள்ள கென்சஸ் ஓட்டல் நோக்கி ஒருவர் தூக்கிச் சென்றது பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வந்தனர். இந்நிலையில் பிற்பகலில் சிறுவன் மீட்கப்பட்டான். திருப்பதி எஸ்.பி. முன்னிலையில் பெற்றோர்களிடம் சிறுவனை போலீஸார் ஒப்படைத்தனர்.