காத்மாண்டு, நேபாளத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் எதிரொலியாக, புதுடில்லி உட்பட வட மாநிலங்களின் சில பகுதிகளில், அதன் தாக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பஜாங் மாவட்டத்தை மையமாகக் கொண்டு, நேற்று பகல் 2:40 மணிக்கு, 5.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
இரண்டாம் முறையாக 3:06 மணிக்கு, 6.3 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பகல் 3:10 மணி முதல் மாலை 5:38 மணி வரையில், ஆறு முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில நடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறினர்.
பஜாங் மாவட்டத்தில் நான்கு மாணவர்கள் உட்பட ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மதிப்பாய்வு செய்தபின் அறிவிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, நம் நாட்டின் தலைநகர் புதுடில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உட்பட வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். நீண்ட நேரத்துக்குப் பின் இயல்பு நிலை திரும்பியது.
இந்த நில அதிர்வால் நம் நாட்டில் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்