பெங்களூரு, : பி.எம்.டி.சி., டிப்போக்களில், ஊழியர்களுக்கு ‘காந்தி பாயின்ட்’ என்ற பெயரில், உணவகம் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் இந்திரா உணவகங்களை காங்கிரஸ் அரசு திறந்துள்ளது. இவை ஏழைகளின் பசியைப் போக்குகின்றன.
இதேபோன்று, போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு தரமான உணவு, சிற்றுண்டி அளிக்க உணவகம் திறப்பதாக, முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படியே பெங்களூரில், பி.எம்.டி.சி.,யின் நான்காவது டிப்போவில் ‘காந்தி பாயின்ட்’ என்ற பெயரில், உணவகம் திறக்கப்பட்டது.
இதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி திறந்துவைத்தார். இங்கு தரமான, சுவையான உணவு, சிற்றுண்டிகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
உணவகத்தைத் திறந்துவைத்த பின், அமைச்சர் ராமலிங்கரெட்டி பேசியதாவது:
ஏற்கனவே மெஜஸ்டிக் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்தில், உணவகம் திறக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நகரின் மத்திய பஸ் நிலையத்தில் உணவகம் திறப்பதால், நான்கு போக்குவரத்துக்கழகங்களின் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு உதவியாக இருக்கும்.
உணவகங்களில் தரமான, சுவையான உணவு, சிற்றுண்டி கிடைக்கும். இது போன்று, அனைத்து டிப்போக்களிலும், உணவகங்கள் துவக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement