வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி, பெண்ணையாறு நதி நீரைப் பங்கிடுவது தொடர்பான விவகாரத்தில், நடுவர் மன்றம் அமைக்காமல் இழுத்தடிக்கப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடகாவில் உருவாகி, தமிழகம் வழியாக பாயும் பெண்ணையாற்றில், நதி நீரைப் பங்கிட்டு கொள்வது தொடர்பாக, இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை உள்ளது.
இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘கர்நாடகாவில் புதிய அரசு அமைந்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்தி தீர்வு காணத் தயாராக உள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது’ என, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை, கர்நாடகா சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் உறுதி செய்தார்.
‘இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதனால் அதை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும். மீண்டும் மீண்டும் பேச்சில் ஈடுபடுவதில் பயனில்லை’ என, தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
‘நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான திட்டம், மத்திய அமைச்சரவையில் பரிசீலனையில் உள்ளதாக, மத்திய அரசு சார்பில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏன் இந்த அளவுக்கு இழுத்தடிப்பு நடக்கிறது’ என, உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரம் தொடர்பான தற்போதையை நிலை குறித்த அறிக்கையை, ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement