மதுரை: கர்ப்பிணிகள் மரணம்; ஆவணங்கள் திருத்த சர்ச்சை; நடவடிக்கைக்கு உத்தரவிட்ட கலெக்டர்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிகள் 3 பேர் மரணமடைந்ததாகவும், அவர்களின் சிகிச்சை ஆவணங்கள் திருத்தப்பட்டதாகவும் எழுந்திருக்கும் புகார், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்ப்பிணி

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள ஆரம்ப சுகாதர நிலையங்களில் மகப்பேறுகால சிகிச்சை எடுத்து வந்த 2 கர்ப்பிணிகள், கடந்த மாதம் பிரசவத்துக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவரும் பிரசவத்துக்குப் பிறகு உயிரிழந்துவிட்டனர்.

மரணம் குறித்து கர்ப்பிணி ஒருவரின் உறவினர்கள் கேட்டதற்கு, “டெங்கு காய்ச்சல் இருந்ததால், உயிரிழந்துவிட்டார்” என அரசு மருத்துவமனையில் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், “ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியபோது, அந்தப் பெண்ணின் உடல்நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது” என மாநகராட்சி நகர்நல அலுவலர், ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் புகார் தெரிவித்தார். இது அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கும், நகர ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னையானது.

அரசு ராஜாஜி மருத்துவமனை

அதைத் தொடர்ந்து, “ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்களில், இந்த மாதம் மட்டும் மொத்தம் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மகப்பேறு வார்டின் மருத்துவர்கள், செவிலியர்களின் கவனக்குறைவே இதற்குக் காரணம். இது போன்று அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்காமல், நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களில் டெங்கு உள்ளிட்ட பிற நோய்களைக் குறிப்பிட்டு முறைகேடு செய்து, பழியை ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேல் சுமத்துகிறார்கள். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமாரிடம், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் கூட்டாகப் புகாரளித்தனர்.

மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், கலெக்டர் சங்கீதாவிடம் புகார் கூற, உடனே இரண்டு தரப்பிலும் விசாரணை செய்தார். விசாரணையில் அரசு மருத்துவமனை மருத்துவர்களும், ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர்களும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், மரணமடைந்த கர்ப்பிணிகளின் சிகிச்சை ஆவணங்களில் திருத்தம் செய்ததையும், இறந்து பின்பும் சிகிச்சை அளித்திருப்பதையும் ஆய்வு செய்து அறிந்த கலெக்டர், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலுக்கு உத்தரவிட்டார். அவரோ, அரசு மருத்துவர் சங்கத்தினருக்குப் பயந்துகொண்டு, நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.

கலெக்டர் சங்கீதா

அதைத் தொடர்ந்து பொது சுகாதராத்துறை துணை இயக்குநர், மருத்துவக் கல்வி துணை இயக்குநர், தேசிய சுகாதார இயக்க மாநில இயக்குநர் ஆகியோர் கொண்ட குழுவினர், மதுரை அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், “கலெக்டர், மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது தவறு. நகர்நல அலுவலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை போராட்டம் நடத்துவோம்” என்று அரசு மருத்துவர் சங்கத்தினர் அறிவித்திருக்கின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் செந்தில், “மதுரை அரசு மருத்துவமனையில் வண்டியூரைச் சேர்ந்த கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டு, கடந்த மாதம் 29-ம் தேதி சிகிச்சைக்குப் பிறகு மரணமடைந்தார். ஆனால் நகர்நல அலுவலர் வினோத், கூட்டமாக மகப்பேறு வார்டுக்குள் வந்து மருத்துவப் பதிவேடுகளைப் பார்த்திருக்கிறார். அது தவறான செயல். பிரசவத்தின்போது ஒருவர் இறந்துவிட்டால், அது குறித்து விசாரணை நடத்த தணிக்கை குழு இருக்கிறது. அவர்களிடம்தான் அவர் முறையிட வேண்டும். அதைவிடுத்து மருத்துவப் பதிவேடுகளில் அரசு மருத்துவர்கள் திருத்தம் செய்திருக்கின்றனர் என்று குற்றம்சாட்டியிருக்கிறார். அப்படியெல்லாம் திருத்தவில்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்பதால், பயிற்சி மருத்துவர்கள் தவறுதலாக எழுதியதை திருத்தம் செய்திருக்கலாம். இது சாதாரண விஷயம்.

அரசு மருத்துவர் சங்கத்தினரின் செய்தியாளர் சந்திப்பு

இந்த நிலையில், அவர் சொன்ன புகாரை வைத்து கலெக்டர், மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதைக் கண்டிக்கிறோம். நகர்நல அலுவலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதை வலியுறுத்தி கோரிக்கை அட்டைகளை அணிந்து, குடும்ப நல அவசர சிகிச்சைகள் உட்பட அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை நிறுத்துவது எனவும், தங்கள் கோரிக்கை தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், அரசு மருத்துவர் சங்கத்தில் தீர்மானம் இயற்றியிருக்கின்றனர்.

“ஆண்டுக்கு இரு முறை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களில் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆய்வுசெய்து, அது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி அதிகமாக மரணங்கள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை இயக்குநரகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அதனால்தான், இந்த விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் மாற்றிப் மாற்றி புகார் தெரிவித்துக் கொள்கின்றன” என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.