மெக்சிகோ: மெக்சிகோ தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மெக்சிகோவின் மடெரோ நகரத்தில் உள்ள சான்டா க்ரூஸ் தேவாலத்தில் கடந்த ஞாயிறு (அக்.01) மதியம் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், முதியவர்கள் உட்பட 300-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், பாதிரியார் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்து கொண்டிருந்தபோது, கான்க்ரீட் கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று மீட்புக் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். தேவாலயத்தின் கூரை திடீரென இடிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து சிசிடிவி கேமரா உதவியுடன் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த தேவாலயத்தில் இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மெக்சிகோவில் நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு என்றாலும், விபத்து நடந்த நேரத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டதற்கான அறிகுறிகள்கூட எதுவும் இல்லை என்று தேசிய நில அதிர்வு மையம் விளக்கமளித்துள்ளது.