சித்தோர்கர்/குவாலியர்: மத்திய பிரதேசத்தில் ரூ.19,260 கோடி, ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி என மொத்தம் ரூ.26,260 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
ராஜஸ்தானின் சித்தோர்கர் பகுதியில் நேற்று நடந்த விழாவில் எரிவாயு குழாய் திட்டம், தேசிய நெடுஞ்சாலை, இரட்டை ரயில் பாதை உட்பட ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசும்போது, “தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். தூய்மை, சுயசார்பு, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளை அவர் போதித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு காந்தியடிகளின் இந்த 3 கொள்கைகளையும் கண்டிப்புடன் பின்பற்றி வருகிறது’’ என்று தெரிவித்தார்.
பின்னர் ராஜஸ்தானின் மேவாரில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையும் என்பது முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாகவே பாஜக ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸின் திட்டங்கள் முடிவுக்கு வரும் என்று கெலாட் அடிக்கடி கூறி வருகிறார். இப்போதே அவர் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரது நேர்மையை பாராட்டுகிறேன். இப்போது கெலாட்டுக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு கெலாட் அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அவரைவிட மிகச் சிறப்பாக செயல்படுத்துவோம்.
ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. அனைத்து துறைகளிலும் ஊழல் செழித்தோங்கி வளர்கிறது. இந்த நேரத்தில் ஓர் எச்சரிக்கை விடுக்கிறேன். மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தப்ப முடியாது.
ஊழல்வாதிகள் ஓடி ஒளிய முடியாது. பாஜக ஆட்சி அமைத்த பிறகு ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள். ஊழல் அறவே ஒழிக்கப்படும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தாமரை முகத்தை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்வோம். ராஜஸ்தானில் தாமரை மலர பாஜக தொண்டர்கள் மிகக் கடினமாக உழைக்க வேண்டும். தேர்தல் தோல்வி பயத்தால் காங்கிரஸ் வதந்திகளை பரப்பி வருகிறது. இந்த வதந்திகளை பாஜகவினர் முறியடிக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தான் முழுவதும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளன. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு குற்றங்களை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும்.
காந்தி ஜெயந்தியை ஒட்டி கடந்த 1-ம் தேதி நாடு தழுவிய தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு தூய்மை இயக்கத்தில் துளியும் ஆர்வம் காட்டவில்லை. கமிஷன் தொகை கிடைத்தால் மட்டுமே காங்கிரஸ் காரியத்தில் இறங்கும். இது எல்லோருக்கும் தெரியும். காந்தியடிகள், மக்கள் சேவை, தூய்மை இயக்கங்களை அந்த கட்சி விரும்பவில்லை.
தையல்காரர் கொலை: ராஜஸ்தானின் உதய்பூரில் தையல் தொழிலாளி கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை கொலையாளிகள் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இதை ராஜஸ்தான் மக்கள் மறக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி எப்போதும்போல தொடர்ந்து வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. ராஜஸ்தான் மக்களால் தேஜ் பண்டிகையைகூட அமைதியாக கொண்டாட முடியவில்லை. பல்வேறு இடங்களில் தேஜ் பண்டிகை ஊர்வலத்தின் போது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ம.பி.யில் வளர்ச்சி திட்டங்கள்: மத்திய பிரதேசத்தின் குவாலியரில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.19,260 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதன்படி டெல்லி-வதோதரா விரைவு சாலை திட்டத்தை நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். புதிதாக 5சாலை திட்டங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் ரூ.140 கோடி செலவில் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.