விஜயகாந்தின் ‘கஜேந்திரா’, விக்ரமின் ‘பிதாமகன்’ உள்பட பல படங்களை கொடுத்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை நேற்று உயிரிழந்தார்.
விக்ரம், விஜயகாந்த் தவிர சத்யராஜை வைத்தும் சில படங்களைத் தயாரித்துள்ளார் துரை. ‘என்னமா கண்ணு’, ‘விவரமான ஆளு’, ‘லூட்டி’, உள்பட அத்தனையும் மினிமம் கேரண்டி முறையில் தயாரான படங்கள். தயாரிப்பாளர் துரையின் மறைவு குறித்து இங்கே கனத்த மனத்துடன் நினைவுகளை பகிர்கிறார் ‘விவரமான ஆளு’ படத்தின் இயக்குநரான கே.செல்வபாரதி. விஜய்யின் ‘நினைத்தேன் வந்தாய்’, ‘வசீகரா’ படங்களையும் இயக்கியும், ‘ப்ரியமானவளே’ படத்தின் வசனத்தையும் எழுதியவர் செல்வபாரதி.
”தயாரிப்பாளர் துரை சாரின் மறைவு தனிப்பட்ட முறையிலும் எனக்கு இழப்பு தான். அருமையான மனிதர். தன்மையா பழகுவார். நான் விஜய் படங்கள் இயக்கிட்டு இருக்கும் போது என்னிடம் வந்தார். ‘சின்ன பட்ஜெட்ல ஒரு படம் தயாரிக்க விரும்புறேன். நீங்க இயக்குவீங்களா?’ என பணிவா அவர் கேட்ட விதம், இன்னமும் என் மனசுக்குள்ல நிற்குது.
திட்டமிடல்ல அவர் கெட்டிக்காரர். அந்த சமயத்துல ‘இன்று பாடல் பதிவுடன் படப்பிடிப்பு ஆரம்பம்’னு பாடல் பதிவை முடிச்சிட்டுத்தான் படப்பிடிப்புக்கே கிளம்புவோம். ஆனா, துரை சார், ‘பாடல் ரெக்கார்ட்டிங்கை அப்புறமா பாத்துக்கலாம். வசன போர்ஷன்கள் முழுவதையும் முடிச்சிட்டுத்தானே பாடலை படமாக்குவீங்க. அந்த டைம்ல நாம பாடல் பதிவை பண்ணிக்கலாம்’னு சொல்லி, பாடல் பதிவுக்கான பணத்தை படப்பிடிப்புக்கு பயன்படுத்துவார். சிறந்த நிர்வாகி.
படப்பிடிப்பு விஷயத்துல அத்தனையும் நமக்கு சரியா கொடுத்துடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் வரவே மாட்டார். ஆனா, முன்கூட்டியே திட்டமிட்டு விடுவார். ‘நாளைக்கு என்ன ஷூட் பண்ணப்போறீங்க?னு கேட்டு வச்சுப்பார். அடுத்த நாள் காலையில நாம ஸ்பாட்டுக்கு போனால் அன்னிக்கு படப்பிடிப்புக்கு தேவையான அத்தனை விஷயங்களும் தயாரா இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர். அத்தனை பேர்கிட்டேயும் அன்பா பழகுவார்.
‘விவரமான ஆளு’ படத்தில் சத்யராஜ், தேவயானி, மும்தாஜ், விவேக்னு நிறைய பேர் நடிச்சிருப்பாங்க. அத்தனை பேரையும் வச்சு, 40 நாட்கள்ல படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார். நான் 39வது நாள்ல மொத்த படப்பிடிப்பையும் முடிச்சுக்கொடுத்துட்டேன். இப்ப சினிமா டிஜிட்டல்ல அது ஈஸியான விஷயம். ஆனா, அப்ப அப்படியில்ல. ஃபிலிம்ல ஷூட் பண்ணினோம். அவ்ளோ குறுகிய காலத்துல ஒரு படத்தை முடிக்க துரை சாரின் சரியான திட்டமிடல் தான் காரணம்னு சொல்வேன். அவரோட இழப்பு திரையுலகிற்கும், எனக்கும் பேரிழப்பு தான்.” என்கிறார் கலங்கிய கண்களோடு!