கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு அருந்ததியர் தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இங்கு வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். காந்தி ஜயந்தி தினமான நேற்று கறுப்புக்கொடியேற்றும் போராட்டம் நடத்துவதாக திராவிடர் தமிழர் கட்சியினர் அறிவித்தனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்த நிலையில், திடீரென திருவனந்தபுரம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்து அழைத்துச் செல்ல முயன்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை மினி பஸ்ஸில் ஏற்றியபோது போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் சாலையில் கிடந்த கற்களை எடுத்து மினிபஸ் மீதும், போலீஸார் மீதும் வீசினர். இதில் மினிபஸ்ஸின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. நிலைமை எல்லை மீறி போனதால், போராட்டக்காரர்கள்மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
போலீஸாரின் தடியடியில் குமார், கிருஷ்ணன் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக பெண்கள் உட்பட 160 பேர்மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. போராட்டத்தை ஒருங்கிணைத்த திராவிடர் தமிழர் கட்சியைச் சேர்ந்த நெல்லை வழக்கறிஞர் கதிரவன் மற்றும் திருநெல்வேலி, ஆரல்வாய்மொழி, மேலப்பாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 9 பேர்மீது மினிபஸ் கண்ணாடி உடைப்பு, போலீஸாரைத் தாக்கியது, பொது சொத்துகளைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அருந்ததியர் தெரு மக்கள் கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு பட்டா கேட்டு போராடி வருகின்றனர். ஆனால், அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதுவரை அமைதியான முறையில் தங்கள் கோரிக்கையை முன்வைத்த மக்களை சிலர் திசைதிருப்பியதால், டி.எஸ்.பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் சட்டையைப் பிடித்து இழுத்தது, கல்வீச்சு போன்ற நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றனர். இதுவே தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.